ஜெயலலிதாவின் சமாதியில் வைத்தே இறுதி முடிவு!

சசிகலா ஒரு சத்தமும் இல்லாமல் இருக்கிறார் என்ற தகவல்கள் ஒரு பக்கம் கசிந்து கொண்டிருக்கையில், அவர் பாட்டுக்கு அடுத்த அதிரடிகளில் இறங்கி கொண்டிருக்கிறார் என்ற விறுவிறுப்பான செய்திகள் வெளிவர தொடங்கி விட்டன. இதனால் அடுத்த ஒரு வாரத்திற்குள் தமிழக அரசியலில் புயல் வீசப் போகிறது என்ற தகவலும் உலவுகின்றது.

விரைவில் தேர்தல் வர உள்ளது. இதில் தி.மு.க தலைவரும், முதல்வரும் தனித்தனியாக பிரச்சாரங்களை ஆரம்பித்து விட்டனர். எனினும் சசிகலாவின் வருகை எத்தகைய தாக்கத்தை தரப் போகிறது என்பது குறித்தும், ஆளும் தரப்பு குறித்தும் அரசியல் நோக்கர்கள் பின்வருமாறு கூறுகின்றனர்.

அ.தி.மு.க தலைமையானது, தேர்தல் பணியில் வேகமெடுத்து வருகிறது. விருப்புமனு தாக்கல், உத்தேச பட்டியல் என அடுத்தடுத்த வேலைகளில் மும்முரம் காட்டி வருகிறது. இத்தனைக்கும் கூட்டணியே முடிவு செய்யாமல், உறுதியும் செய்யாமல், இந்த பணிகளை அ.தி.மு.க கையில் எடுத்துள்ளது. தி.மு.கவும் இப்படி ஒரு முடிவை உடனே எடுக்கவில்லை.

அ.தி.மு.கவின் இந்த அதிரடிக்கு ஒரு காரணம் இருக்கிறது. சசிகலா அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் ஏதோ வேலை நடப்பது போல அ.தி.மு.க தலைமைக்கு ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. அதனால், சசிகலாவுக்கு முந்திக் கொண்டுதான் இதுபோன்ற நடவடிக்கைகளை எடப்பாடி கையில் எடுத்தார். இப்படி வேட்பாளர் பட்டியலையும் வெளியிட போகிறார்கள். இதற்குக் காரணம், சசிகலா பக்கம் யாரும் சாய்ந்து விடக் கூடாது என்பதாலும், தன் தரப்பு நிர்வாகிகளை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதாலும் இப்படி ஒரு முடிவை எடப்பாடி தரப்பு எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

அதே போல, சசிகலா தரப்பை எடுத்துக் கொண்டால், இவ்வளவு காலமாக விசாரிக்கப்படாமல் இருந்த பொதுச் செயலாளர் ரத்து குறித்து உடனடியாக விசாரிக்கக் கோரி சட்டத்தரணி ராஜா செந்தூர் பாண்டியன் மேல்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார். இதுதான் அ.தி.மு.க தலைமையை இலேசாக அசைத்தும், கலக்கத்தை தந்தும் வருகிறது.

அதுமட்டுமல்ல, எப்படி வருகிற 24-ம் திகதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அ.தி.மு.கவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அது போலவேதான் சசிகலாவும் அன்றைய நாளை எதிர்நோக்கி உள்ளார். அன்றைய தினம் சசிகலாவிடம் இருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. எப்படியும் அன்றைய தினம் ஜெயலலிதா சமாதியை மூட முடியாது. திறந்துதான் வைத்திருக்க வேண்டும்.

தமிழக அரசு அங்கு மரியாதை செலுத்த வேண்டி இருக்கும். எனவே, அன்று, ஜெயலலிதாவின் சமாதிக்கு சசிகலா சென்று மரியாதை செலுத்த போகிறாராம். அப்படியே அங்கேயே உட்கார்ந்து கொஞ்ச நேரம் தியானமும் செய்யப் போகிறாராம். இதன் மூலம் மொத்த தமிழகத்தையும் தன் பக்கம் ஒரே நாளில், அதுவும் கொஞ்ச நேரத்தில் இழுத்து விடலாம் என்று கணக்கு போடுகிறாராம்.

அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு விடும். அதாவது காபந்து அரசு வந்து விடும். எனவே, எந்தவித அரசியல் நிகழ்வுகளையும் ஆளும் தரப்பால் கட்டுப்படுத்த முடியாது. அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த யோசித்து வருகிறார் சசிகலா எல்லாவற்றிற்கும் மேலாக, எப்படியும் இந்த முறை நிறையப் பேர் அ.தி.மு.கவில் ஆசனம் கேட்டு வருகிறார்கள்.

இதில் சீட் கிடைக்காதவர்கள், அதிருப்தியாளர்கள், சசிகலா பக்கம் தாவ காத்திருப்போர் என பலரும் அதற்கு பிறகு துணிந்து வெளியே ஒவ்வொருவராக சசிகலா பக்கம் வர வாய்ப்புள்ளது. அப்போதுதான் பிரச்சினை பெரிதாக வெடிக்க வாய்ப்புள்ளது. எனவே இதனை அதிமுக இரட்டை தலைமை சமாளிப்பார்களா? அல்லது கட்சிகளை ஒன்றிணைக்க ஒப்புக் கொள்வார்களா? என்பது இனிமேல்தான் தெரியவரும் என்றனர்.


Add new comment

Or log in with...