பாரதிய ஜனதா கட்சியை ஏன் இலங்கையில் ஆரம்பிக்க முடியாது | தினகரன்

பாரதிய ஜனதா கட்சியை ஏன் இலங்கையில் ஆரம்பிக்க முடியாது

- சிவாஜிலிங்கம் கேள்வி

உலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளபோது, பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று யாழில் உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில், கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையின் பல பகுதிகள் சீனாவுக்கு வழங்கப்படும் போது ஒரு நித்திரை கொண்டிருந்த தென்னிலங்கை தொழிற்சங்கவாதிகளும், ஜே.வி.பி போன்ற இனவாத சக்திகளும், கிழக்கு முனையம் இந்தியாவிற்கு கொடுக்கப்பட போகிறது என்றதும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்துகிறார்கள்.

இதையடுத்து அந்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடுகிறது. யப்பான், இந்தியாவுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்களையும் இலங்கை கைவிட்டுள்ளது. இதேபோல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுத்து விட்டார்கள். மேலும் பல ஆயிரம் ஏக்கர் காணிகளை வழங்கப்படவுள்ளது.

பாரதிய ஜனதா கட்சி இங்கு வரப் போகிறது என அலறி துடிக்கிறீர்கள். அந்த சட்டம் இந்த சட்டம் என கூறிக்கொண்டிருக்கிறீர்கள். உலகம் முழுவதும் கொம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அப்படியென்றால் பாரதிய ஜனதா கட்சியென்ற பெயரில் இலங்கையில் ஏன் கட்சி ஆரம்பிக்க முடியாது?

நீங்கள் அதே சின்னத்தை வழங்காமல் விடலாம். பொதுஜன பெரமுன தாமரை பூ சின்னம் கேட்டபோது, தாமரை புத்தருக்கு படைக்கப்படும் மலரென, தாமரை மொட்டை கொடுத்தீர்கள். மொட்டு புத்தருக்கு படைக்கப்படுவதில்லையா?

உலகத்தில் பல நாடுகள் உடைத்து துண்டுதுண்டாடப்பட்டுள்ளது. வேண்டுமென்றால் இலங்கை இரண்டாக உடைக்கப்பட்டு, தமிழீழ மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும், சிறிலங்கா மாநிலத்திற்கு ஒரு முதலமைச்சரும் தெரிவு செய்யப்பட்டு எல்லோரும் டெல்லி பாராளுமன்றத்திற்கும், மேற்சபைக்கும், ராஜ்ஜிய சபைக்கும் செல்ல வேண்டுமென்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்குமான பிரச்சினையில், உக்ரேனின் கிரேமியா பகுதி ரஷ்யாவினால் உடைக்கப்பட்டு, சுயாட்சி பிரதேசமாக்கப்பட்டுள்ளது. இந்தியா, அமெரிக்காவிற்கு எதிராக இலங்கை செயற்பட்டால், அந்த நாட்டுப் படைகள் இங்கு வரும் நிலைமை ஏற்படும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...