சுற்றாடலும் எமது போசணையும் | தினகரன்

சுற்றாடலும் எமது போசணையும்

மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் பிரதானமானது உணவு. நாம் உண்ணும் உணவுகள் தான் எம் உடலுக்குத் தேவையான போசணையைத் தருகிறன. எமது வருமானத்தின் பெரும்பகுதியை நாம் உணவுக்காகத்தான் செலவளிக்கின்றோம். ஏழை,பணக்காரன் என்று வித்தியாசமில்லாமல் நாம் எல்லோரும் உணவைப் பல வழிகளிலும் பெற்றுக்கொள்கின்றோம்.

பணம் கொடுத்து உணவுப் பொருட்களை வாங்குகின்றோம். வீட்டுத் தோட்டங்கள் அமைத்தும், சுயமாக பயிர்ச் செய்கை மேற்கொண்டும் எமக்குத் தேவையான உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்கின்றோம். அதுமட்டுமல்லாது எம் சுற்றாடலிலும் சில உணவுப்பொருட்களை பெற்றுக்கொள்கின்றோம்.

குறிப்பாக பல்வேறு இலைக்கீரை வகைகள், பழங்கள், காய்கறி வகைகள், கிழங்கு வகைகளை உணவாக உட்கொள்கின்றோம். இவற்றிலுள்ள தனிச்சிறப்பு என்னவென்றால் இவை இரசாயன விசிறலுக்கு அப்பாற்பட்டவை. இலகுவாகக் கிடைக்கக்கூடியவை. ஏன் இலவசமாகவும் கிடைப்பவை. இவை மூலம் உயிர்ச்சத்துக்களான விட்டமின்கள், கனியுப்புக்களும் இயற்கையாகவே கிடைக்கும். அது மட்டுமல்ல எம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் வகையில் ஆயுர்வேதச் சிறப்பும் வாய்ந்ததாகக் காணப்படுகின்றன. கொரோனாவின் அச்சுறுத்தலுடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், எம் உடலின் ஆரோக்கியம் மிக முக்கியம். குறிப்பாக எம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை இந்த இயற்கையான உணவுகள் மூலம் தான் பெற்றுக் கொள்ள முடியும். கீரைவகைகளை எடுத்துக் கொண்டால், வேலிகளில் படர்ந்து வளரும் கொவ்வை, முடக்கொத்தான், முசுமுசுக்கை, முசுட்டை, குறிஞ்சா, சீந்தில், முல்லை, பிரண்டை என பலவகைகள்.

மேலும் கருவேப்பிலை மணத்தக்காளி, தவசிமுருங்கை போன்ற செடிவகை அத்துடன் ஓங்கிவளரும் அகத்தி, முருங்கை, சண்டி போன்ற மரங்களிலும் நாம் சத்தான கீரை வகைகளைப் பெற்றுக் கொள்கின்றோம்.

பழவகைகளில் நாவல், இலந்தை, அன்னமுன்னா, ஜம்பு, கொய்யா, விளா, இலுப்பை, வில்வம்பழம், பாலைப்பழம், மா, புளியம்பழம், நாரத்தை என எத்தனை எத்தனையோ பழங்கள்!

பலா,ஈரப்பலா போன்ற சமையலுக்குதவும் மரக்கறி, மற்றும் இஞ்சி, மஞ்சள், பனங்கிழங்கு, மோதகவள்ளி, சிறுவற்றாளை போன்ற கனிப்பொருள்கள் நிறைந்த கிழங்குவகைகள் எல்லாமே எம் சுற்றாடலில் இயற்கையான, இரசாயன விசிறலுக்குட்படாத வகையில் எமக்குக் கிடைக்கின்றன.

எமது இயற்கையான சுற்றாடல், நாளாந்தம் மாடிமனைகள் கட்டப்படுவதாலும், பயிர்ச் செய்கைக் காணிகள் துண்டாக்கப்பட்டு வீடுகள் அமைப்பதனாலும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் நாம் சாணக்கியமாக பல்வேறு பயிர்களையும் வீட்டுத்தோட்டங்களில் உருவாக்கியும், பசுந்தாட்பசளைகளை பெற்றுக் கொள்ளும் வண்ணம் உயிர்வேலிகள் அமைத்தும் இயற்கை மூலிகைக் கொடிவகைகளையும் பயிரிட வேண்டும். மாடி மனைகள் ஆக இருந்தாலும், பொதிப்பயிர்ச் செய்கை முறையினால் நாம் எமது சுற்றாடலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றலாம்.

இவ்வாறாக நாம் எம் சுற்றாடலில் இருந்து பெறும் உணவுப் பொருட்களை போசணைச் சத்து அழியாமலும் சமைக்கத் தெரிந்து கொள்ள வேண்டும். எம்மில் எத்தனை பேருக்கு இரசம், இலைக்கஞ்சி போன்றவற்றை தயாரிக்கத் தெரியும்? அடுத்து நாம் சமைக்கும் போது எமது சமையல் முறைகள், உணவில் காணப்படும் போசணை சத்துக்களை இழக்காத வகையில் தயாரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் போசணையான இரு உணவுத் தயாரிப்புக்களைப் பார்ப்போம்,

கலவன் கீரை சுண்டல்

தேவையான பொருட்கள்

கொவ்வை கைப்பிடி, முசுட்டை, கருவேப்பிலை, மணத்தக்காளி கீரை, வல்லாரை, மொசுமொசுக்கை, முருங்கையிலை, சண்டி4-5 இலைகள், தேங்காய்ப்பூ½ கப், பச்சை மிளகாய் 2-3, சின்னவெங்காயம்5-6, நல்லெண்ணை 1மே.கரண்டி, தேசிப்புளி, உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

மேற்கூறப்பட்ட எல்லாக் கீரை வகைகளிலும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். சண்டியிலைகள் 4-5ஐ எடுத்து அதனையும் கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு சண்டியிலையையும் எடுத்து மற்றைய கீரைகளை இதில் வைத்து சுற்றி மெலிதாக அரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதனுடன் குறுணலாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், துருவிய தேங்காய்ப்பூ அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். அளவாக உப்புத் தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறி எடுக்கவும். ஒரு பாத்திரத்தை (மண்சட்டியானால் விசேஷம்), எடுத்து கழுவி அடுப்பில் வைத்து வெறும் சட்டியை முதலில் சூடாக்கி, இந்த பிசறி வைத்திருக்கும் கீரையை பாத்திரத்தில் இட்டு கிளறவும்.

உப்புத்தண்ணீர் சேர்த்த கீரை நன்கு குழைந்து சூடாகி வரும். 5-7 நிமிடம்வரை கரண்டியால் நன்கு வறுத்தபடியே எடுத்து வைத்த நல்லெண்ணையயும் (நெய்யும் சேர்க்கலாம்) சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கி வைத்து தேசிப்புளி சேர்க்க வேண்டும்.

குறிப்பு:-

கீரை வகைகளை தண்ணீர் சேர்த்து அவியவிடாது உப்புத்தண்ணீர் மட்டும் சேர்த்து சமைப்பதால்,சத்துக்கள் அழியாது பாதுகாக்கப்படும். எண்ணை சேர்ப்பதால், கீரைவகைகளில் காணப்படும் (விட்டமின் யு), கரோட்டின் உடலில் அகத்துறிஞ்ச இலகுவாக இருக்கும்.

அவ்வாறே விட்டமின் சி நிறைந்த தேசிப்புளி சேர்ப்பதால் கீரைவகைகளில் அதிகமாகக் காணப்படும் இரும்புச்சத்து உடலில் நன்கு அகத்துறிஞ்சப்படும். தேசிப்புளியை அதிக சூட்டுடன் சேர்த்தால் அதிலுள்ள விட்டமின் சிஅழிந்துவிடும்.

முடக்கொத்தான் இரசம்

தேவையான பொருட்கள்

முடக்கொத்தான் வேருடன்கூடிய கொடி ஒன்று, மிளகு 1தே.க., நற்சீரகம் 1தே.க., உள்ளி 4-5பல்லு, மஞ்சள் ¼தே.க, கொத்தமல்லி 1 மே.க, எண்ணெய் 1மே.க, சின்னவெங்காயம் 6, செத்தல் மிளகாய் 4, கடுகு ½ தே.க, கருவேப்பிலை 2 கெட்டு, பழப்புளி கரைசல் 2 மே.க., உப்பு தேவையான அளவு.

செய்முறை:-

முடக்கொத்தான் கொடி ஒன்றை வேருடன் பிடுங்கி எடுத்து நன்கு கழுவி ஒரு வட்டமாக சுற்றி சிறு உரலிலோ அல்லது அம்மியில் வைத்தோ சற்று தட்டி வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு, நற்சீரகம்,கொத்தமல்லியை அரைத்து மஞ்சளையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த கூட்டை ஒரு பாத்திரத்தில் இட்டு, ஒரு ஐந்து (5)கப் தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்க வேண்டும்.

இரசம் வைக்கும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணை சேர்த்து சூடாகியதும், அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் கடுகு, கருவேப்பிலை, செத்தல் சேர்த்து தாளித்து, அரைத்து வைத்து இருக்கும் கூட்டைச் சேர்த்து, தட்டி வைத்து இருக்கும் முடக்கொத்தான் கொடியையும் அதனுள் அமிழ்த்தி விடவேண்டும்.

இரசம் சூடாகி, தளதளவென்று கொதிக்கத் தொடங்கியதும் உப்பு, புளி சுவையை சரிபார்த்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். நீண்ட நேரம் கொதிக்க விட்டால் ஒரு கயர்ப்பு சுவை இரசத்தில் காணப்படும்.

அருந்ததி வேல்சிவானந்தன்
பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர்
வவுனியா


Add new comment

Or log in with...