'ஒரே நாடு ஒரே சட்டம்' எனின் முஸ்லிம் சட்டம் மாத்திரமன்றி அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும்

ரத்தன தேரருக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி பதில்

• முஸ்லிம் பெண்களின் திருமண வயது 18 ஆக்கப்படும்
• முஸ்லிம் சட்டம் குர்ஆனுக்கு அமையவல்ல, ஆங்கிலேயர் காலத்தில் வந்தது
• குறைந்த வயதில் கர்ப்பமாவோரில் 80% ஆனோர் ஏனைய மத சிறுமிகள்

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கோட்பாடு செயல்படுத்தப்பட வேண்டுமாயின், முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன்றி, அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்படுவதன் மூலமே மேற்கொள்ள முடியமென, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்வைக்கப்பப்பட்டிருந்த கேள்விகளுக்கு நேற்று (12) பாராளுமன்றத்தில் பதிலளித்த அவர் இதனைத் கூறினார்.

அவர் இதன் போது பதிலளிக்கையில்,

இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதா என,  ரத்தன தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். அதாவது ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் பொருளானது சட்டம் அனைவருக்கும் சமமானதாகும். அனைத்து இடங்களிலும் அது ஒரே வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதாகும்.

அவர் மற்றுமொரு கேள்வியை எழுப்பியிருந்தார், இலங்கையில் தனியார் சட்டங்கள் நடைமுறையில் உள்ளது பற்றி நீங்கள் அறிவீர்களா என்று,

இலங்கையில் பல தனியார் சட்டங்கள் செயற்பாட்டிலுள்ளன. உதாரணமாக, கண்டி திருமண - விவாகரத்து சட்டம், யாழ்ப்பாண விவாக - விவாகரத்து சட்டம் மற்றும் தேச வழமை சட்டம், முஸ்லிம் விவாகச் சட்டம், பௌத்த கிராமங்கள், விகாரைகள் சட்டம், இந்து கலாசார சட்டம், முஸ்லிம் வக்ஃப் சட்டம், சேர்ச் ஒப் சிலோன் சட்டம் உள்ளிட்ட பல சட்டங்கள் இலங்கையில் தனியார் சட்டங்களாக அமுலிலுள்ளன.

இலங்கையில் மாத்திரமல்ல இந்தியா, பிலிப்பைன்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் முஸ்லிம் பிரஜைகளுக்கு முஸ்லிம் சட்டம் அமுலில் உள்ளன.

எதிர்வரும் காலத்தில் இதனை மாற்றி, பொதுவாக ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கு அமைய அனைவருக்கும் ஒரே சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின், முஸ்லிம் சட்டத்தை மாத்திரம் நீக்குவதன் மூலம் மேற்கொள்ள முடியாது. அவ்வாறாயின் அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டும். 

அவ்வாறில்லாமல் இதனை பிரச்சினையாக மாற்றி, அங்கும் இங்கும் பேசிக்கொண்டு, இனங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவது பொருத்தமானதல்ல என, சபாநாயகர் அவர்களே நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டம் குர்ஆனை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகின்றதா, என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவ்வாறு இல்லை சபாநாயகர் அவர்களே. 

1,806ஆம் ஆண்டில், 'மொஹமட் அன் கோர்ட்' எனும் பெயரில் ஆங்கிலேயர்களால், முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களுக்கும், யாழ்ப்பாணத்தில் தேசவழமைச் சட்டம், கண்டியில் கண்டி தனியார் விவாக விவாகரத்து சட்டம் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டன. அவை காலப்போக்கில் ஒரு சில திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம்  முஸ்லிம் இளம் சிறுவர்கள் பலவந்தமாக திருமணம் முடித்துவைப்பதாக அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார.

அது தவறான கருத்தாகும். அது பிரயோக ரீதியில் மேற்கொள்ளப்படுவதில்லை. பெண்ணின் விருப்பத்தை பெற்று, தந்தை கையொப்பமிடுகிறார். அதில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் செய்யலாம். அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்க முடியும்.

பல்வேறு நாடுகளில் பெண்களின், சிறுவர்களின் திருமண வயது தொடர்பில் பல்வேறு வயது வேறுபாடுகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் ஒரு சில பிராந்தியங்களில் தற்போது வரை 13 வயதாக காணப்படுகின்றது. ஜப்பானின் ஒரு சில பிராந்தியங்களில் 15 வயதாக அது காணப்படுகின்றது.

இலங்கையில் 1995 ஆம் ஆண்டு வரை கண்டி சட்டத்தில் பெண்களின் திருமண வயது 16 ஆக காணப்பட்டது.

முஸ்லிம் சட்டத்தின் பிரகாரம் 12 வயதை நிறைவடைந்த ஒரு பெண், பருவ வயதை அடைந்த பின்னர், அவரது விருப்பத்தின் பிரகாரம் திருணம் செய்து வைக்க முடியும். ஆயினும் அதனை மாற்றுவதற்கான காலம் எழுந்துள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதற்கமைய நாம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

ஆயினும் கண்டி விவாக விவாகரத்து சட்டத்தின் 8 முதல் 15 வரையான பிரிவு மற்றும் வழமையான திருமண சட்டத்தின் 22ஆம் பிரிவு ஆகியவற்றை வாசிப்பதன் மூலம் பெற்றோரின் சம்மதத்துடன் 18 வயதுக்கு குறைந்தவர்களையும் திருமணம் செய்து வைக்க முடியும் எனவே முஸ்லிம் சட்டத்தின் மாத்திரமன்றி இது இங்கும் இவ்வாறு காணப்படுகின்றது. ஆயினும் கண்டி தனியார் சட்டம் 1997ஆம் ஆண்டு 18ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னரே இது மாற்றியமைக்கப்பட்டது.

ஆயினும் சட்டப்படி கண்டி தனியார் சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை என்பது குடு பொதுவான திருமண சட்டமும் மாற்றி அமைக்கப்படவில்லை என்பதோடு, திருமண பதிவு சட்டம் மாத்திரமே திருத்தி அமைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, 2002ஆம் ஆண்டில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு ஒன்றை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதாவது திருமண வயதெல்லை 18 வயதாக பொதுவான சட்டத்தின்கீழ் காணப்படுகின்றமையால், பெற்றோரின் சம்மதத்திற்கு உட்பட்டதாக இருந்தபோதிலும் 18 வயதுக்கு குறைந்தவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என அத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது சவுதி அரேபியாவிலும் கூட திருமணத்திற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே அது தொடர்பில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்பதனை நான் இந்த அவைக்கு கூற விரும்புகின்றேன்.

இந்த அனைத்து சட்டங்களும் ஒரேயடியாக உருவாகவில்லை என்பதோடு, காலத்துக்கு காலம் தேவைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

1938 வரை, ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்யும் முறையும் காணப்பட்டிருந்தது. அது அவ்வாறு காலத்துடன் படிப்படியாக மாற்றியமைக்கப்பட்டது.

எனவே இவ்வாறு ஒரு குறிப்பிட்ட மதத்தையோ இனத்தையோ குறிவைத்து அதன் தலைவர்களை குறிவைத்து சாடுவது தொடர்பாக எமக்கு உடன்பாடு இல்லை.

அதற்கமையவே 2020 நவம்பர் மாதம் 20ஆம் திகதி நான் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்திருந்தேன். அதில் நாட்டின் ஏனைய இன பெண்களைப் போன்று முஸ்லிம் பெண்களுக்கும் திருமணம் செய்வதற்கான மிகக்குறைந்த வயது 18ஆக இருக்க வேண்டும் என நாம் யோசனை முன் வைத்துள்ளோம். அது மாத்திரமன்றி பெண்கள் காதி நீதிபதிகளாக செயற்படுதல், திருமணத்தின் போது பெண்களும் கையொப்பம் இடுதல் உள்ளிட்ட யோசனைகளையும் முன் வைத்ததோடு, அது தொடர்பில் குழுவொன்றை நியமித்துள்ளோம்.  நாம் இது தொடர்பில் படிப்படியாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளோம். நிச்சயமாக அது தொடர்பில் திருத்தங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்போம்.

இவ்விடயம் தொடர்பில் தனியான ஆலோசனைக் குழு ஒன்றையும் நான் நியமித்துள்ளேன். அவர்களின் தகவல்களின் படி, சமூகத்தின் மீது இதனை திணிக்காமல் அவர்களது அனுமதியைப் பெற்று செயற்பட வேண்டும் என்று, நான் அதனை மேற்கொள்ள முடியும் என்று மிக உறுதியுடன் நம்புகிறேன்.

அவர் அதற்கு அடுத்தபடியாக, குறைந்த வயதில் திருமணம் முடிப்பதன் மூலம் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதனை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? என்று அவர் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஆம். நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன். சிறுவயதில் திருமணம் முடிப்பது சிறந்ததல்ல. 18 வயதுக்குப் பின்னர்தான் அவர்களால் அதனை சமாளிக்க முடியும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் திருமணம் முடிக்க கூடாது எனும் நிலைப்பாட்டை, நான் ஒரு கொள்கையாக கொண்டுள்ளேன்.

ஆயினும் இலங்கையில் குறைந்த வயதில் திருமணம் முடிப்பது எவ்வாறாக இருந்த போதிலும், குறைந்த வயதில் பெண்கள் தாய்மை அடைகின்றனர். அதில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் முஸ்லிம் சமூகத்திற்கு வெளியிலேயே காணப்படுகின்றனர் என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருமண பதிவு மேற்கொள்ளாத போதிலும் அச்சிறுவர்கள் தாயாகியுள்ளனர். எனவே நாம் அது தொடர்பிலும் அவதானம் செலுத்தி நடவடிக்கைகளை எடுத்து அதனை தீர்க்கவுள்ளோம் என அறிவிக்க விரும்புகின்றேன்.

எனவே, முஸ்லிம் சட்டத்தை மறுசீரமைக்க நாம் நடவடிக்கை எடுப்போம்.

எனவே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற அடிப்படையில், அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்பட வேண்டுமானால், சமூக இணக்கப்பாட்டுடன் ஒரே தடவையில் அனைத்து தனியார் சட்டங்களும் நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் அவை நீக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

அதனை அவ்வாறு மேற்கொள்ள வேண்டுமென அரசாங்கம் நினைக்குமாயின், அது தொடர்பில் செயற்பட்டு, அதனை புதிய அரசியலமைப்பின் மூலம் அதனை எம்மால் மேற்கொள்ள முடியுமென நான் நம்புகிறேன்.

எனவே சபாநாயகர் அவர்களே, இது தொடர்பில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் அதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என்பதனை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


Add new comment

Or log in with...