யானை மின் வேலியில் சிக்கி 8 வயது சிறுவன் மரணம்

யானை மின் வேலியில் சிக்கி 8 வயது சிறுவன் மரணம்-8-year-Old Boy Dies After Being Trapped in Elephant Electric Fence

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தனவெட்டைப் பகுதியில் யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் சந்தனவெட்டை தி/மூ/ ஐங்கரன் வித்தியாலயத்தில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் இந்திரன் ரஜீதன் எனும் 8 வயதுச் சிறுவன் என, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இச்சிறுவன் இரண்டு பிள்ளைகளைக் கொண்ட சிறிய குடும்பத்தின் முதலாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

குறித்த சிறுவன் பாடசாலைக்குச் செல்வதற்காக தயாராகி மலசலம் கழிப்பதற்காகச் சென்ற போது, யானை பாதுகாப்பு மின்சார வேலியில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். அத்தோடு உயிரிழந்த சிறுவனின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் யானை பாதுகாப்புக்குகான  மின்சார வேலிக்கு மின்சாரத்தை  போட்டுவிட்டு அதனை அணைக்காமல் சென்றமையே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனவும், அது தொடர்பில் அதற்கு பொறுப்பான இரண்டு சந்தேகநபர்களையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(தோப்பூர் குறூப்  நிருபர் - எம்.எம். நௌபீக்)


Add new comment

Or log in with...