தமிழ், சிங்களம் மொழிகளை சேர்த்து தேசியகீதம் உருவாக்க வேண்டும்

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூலம் அது இரண்டு நாடுகள் என்ற உணர்வையே ஏற்படுத்தும். எனவே தமிழ், சிங்கள மொழிகளை சேர்த்து ஒரு கீதம் தயாரிக்க வேண்டும் என தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நேற்று முன்தினம் நடைபெற்ற 73வது சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நான்கு மதங்களும் கொண்டாடும் சிவனொளி பாதமலையை கொண்ட இந்த நாடு புனித பூமி. உலகின் மத்தியில் அமைந்துள்ள முக்கிய நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. திரும்பும் திசையெல்லாம் அழகு நிறைந்த செல்வச் செழிப்பு நிறைந்த நாடே எம் நாடு.

கடந்த காலங்களில் வெள்ளையர்களினாலும், வல்லரசுகளினாலும் எமது நாடு சுரண்டப்படுகின்ற போது செய்வதறியாது இருந்த நாம் எம்மால் முடியுமான போராட்டங்களை ஒற்றுமையாக முன்னெடுத்துவந்த காலகட்டங்களில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிலை வந்தமையால் திருகோணமலை துறைமுக பகுதியை தவிர ஏனைய நிலங்களுக்கு விடுதலை கிடைத்தாலும் கால ஓட்டத்தில் அதனையும் நாங்கள் பெற்றுக்கொண்டோம்.

தமிழ் மக்களின் சார்பில் உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து இருக்கிறார்கள். இன்னும் தமது உறவுகளை தேடி மூத்த தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினைகளை முடிக்க கூடாது என்பதற்காக கடந்த காலங்களில் குரங்கு அப்பம் பிய்ப்பது போல பிரச்சினைகளை கையாண்டுள்ளார்கள். இதனால் நாடு மிகப்பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஒரே நாடு ஒரே சட்டத்தை பற்றி அதன் அர்த்தங்களை புரிந்துகொள்ளாமல் பலரும் பேசுகிறார்கள். மதம் என்பது ஒரு நாட்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தும் விடயமல்ல. எல்லைகள் கடந்த விடயம் அது. ஒரே நாடு ஒரே சட்டம் என்பது பிரித்தானியர்கள் விட்ட தவறை திருத்தி எமது நாட்டை வழிநடத்த நாங்கள் எல்லோரும் இணைந்து புதிய அரசியலமைப்பை உருவாக்குவதையே குறிக்கிறது. அதற்கு பிழையான அர்த்தங்களை கற்பிக்க சிலர் முனைகிறார்கள் என்றார்.


There is 1 Comment

Add new comment

Or log in with...