'கவிதை என்பது எழுதும் வடிவத்தில் இல்லை'

நவீன தமிழ் படைப்பிலக்கிய தளத்தில் தனித்துவமான எழுத்து நடைக்கு சொந்தக்காரர் எழுத்தாளர் சு.வேணுகோபால். நாவல், குறுநாவல், சிறுகதைகள் என 18 நுால்களை எழுதி இருக்கிறார். பாரதிய பாஷா விருது, தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி துறை விருது, கேரள மாநில கல்ச்சுரல் சென்டர் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். அவரிடம் நடத்திய கலந்துரையாடலில் இருந்து.....

இந்த ஊரடங்கு காலம் உங்களுக்கு எப்படி பயன்பட்டது?

வீட்டுக்கு வரும் நண்பர்களை உட்கார வைத்து இயல்பாக பேச முடியவில்லை. மற்றபடி, நிறைய படித்தேன், நிறைய எழுதினேன்.

என்ன புத்தகங்கள் படித்தீர்கள்?

மலேசியாவில் உள்ள 'வல்லினம்' இலக்கிய அமைப்பு நடத்தும் கருத்தரங்கில், மலேசிய தமிழ் இலக்கியம் குறித்து பேச அழைக்கப்பட்டு இருந்தேன். கொரோனாவால் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதற்காக மலேசிய தமிழர்கள் எழுதிய, 20 நாவல்களை படித்து முடித்தேன்.அதை குறித்து ஆய்வு கட்டுரையையும் எழுதினேன். தி.ஜானகிராமன் நுாற்றாண்டு வருவதை முன்னிட்டு அவரை பற்றி, 100 பக்கங்களில் கட்டுரை எழுதி இருக்கிறேன்.
படிக்கவும், எழுதவும் மொத்தமாக இத்தனை மாதங்கள் எப்போதும் கிடைத்தது இல்லை; இனியும் கிடைக்காது.

கோவை ஞானி உங்களின் நெருக்கமான நண்பர். அவரது மறைவு உங்களை எவ்வாறு பாதித்தது?
நான் எழுத துவங்கிய காலத்தில், தேனியில் இருந்து அவரை சந்திக்க, கோவைக்கு வருவேன். ஒரு வாரம் அவர் வீட்டில் தங்கி இருந்து உரையாடுவேன். அவர் விரும்பும் நுால்களை வாசித்து சொல்வேன்.நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான இலக்கிய திறனாய்வாளர் அவர். அவரிடம் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

அவர் இறப்பதற்கு, 25 நாட்களுக்கு முன் சந்தித்த போது, நீண்ட நேரம் மவுனமாக இருந்த அவர், ''வேணுகோபால் உங்க திறனாய்வு கட்டுரைகள் எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு,'' என்றார். அவர் என்னிடம் பேசிய கடைசி வார்த்தை அதுதான்.
தமிழ் புதுக்கவிதை வரலாறு குறித்து, ஒரு நுால் எழுதிக் கொண்டிருந்தீர்கள். அது என்னவானது?
எழுதி முடித்து விட்டேன். தமிழ் கவிதையின், 75 ஆண்டு வரலாற்றை பற்றி, விரிவாக எழுதி இருக்கிறேன். பாரதியில் துவங்கி, 2001ம் ஆண்டு வரையான பதிவுதான் அந்த நுால். தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இடையில் கொரோனா வந்ததால், அறிமுக விழா வைக்க முடியவில்லை

தமிழ் கவிதைகள் குறித்து உங்கள் பார்வை என்ன?

கவிதை என்பது எழுதும் வடிவத்தில் இல்லை. வெண்பா, விருத்தப்பா என, இலக்கணத்தோடு எழுதுவதால் கவிதையாகி விடாது. கவிதை எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதைக்கு அதன் உள்ளடக்கம் தான் முக்கியம்.கண்ணதாசன் சினிமா பாடல்களை கூட கவிதையாக எழுதினார். 'ஆயிரம் மலர்களே மலருங்கள்' என்ற பாடலில், 'எழுதிச்செல்லும் விதியின் கைகள் மாறுமோ' என்று எழுதி இருப்பார்; இதுதான் கவிதை. இப்படி பல ஆயிரம் பாடல் வரிகளை, கண்ணதாசன் பாடல்களில் இருந்து உதாரணமாக சொல்லலாம்.

அடுத்து என்ன எழுத திட்டமிட்டு இருக்கிறீர்கள்?

ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல், பெரிய நாவலை எழுத திட்டமிட்டு இருக்கிறேன். அதில் கடந்த நுாறு ஆண்டு கால மாற்றத்தை சொல்ல வேண்டும். விவசாய மாற்றம், சமுக மாற்றம், கல்வி மாற்றம் என, கடந்த நுாற்றாண்டில் நடந்த பல கலாசார மாற்றங்களை அந்த நாவலில் எழுத திட்டமிட்டு இருக்கிறேன்.


Add new comment

Or log in with...