கொவிட்-19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதால் நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் எவை? | தினகரன்

கொவிட்-19 தடுப்பூசி ஏற்றிக்கொள்வதால் நாம் பெற்றுக்கொள்ளும் நன்மைகள் எவை?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் துரிதமுயற்சியின் காரணமாக நாட்டுக்கு முதல் தடவையாக கடந்த வியாழனன்று இந்தியாவிலிருந்து 5 இலட்சம் கொவிட் தடுப்பு மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. அம்மருந்துகளை வழங்கும் பணி மறுநாளே ஆரம்பமாகியது.

நாட்டின் 25 மாவட்டங்களிலும் இத்தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இதற்காக ஜனாதிபதி மற்றும் சுகாதாரத் துறையினருக்கு நாட்டு மக்கள் நன்றி கூற வேண்டும். கொரோனா தடுப்பூசி பற்றிய விடயமே இன்று நாட்டில் பேசுபொருளாக உள்ளது. இத்தடுப்பூசி தொடர்பாக சுகாதார பணியக வட்டாரங்கள் விளக்கங்களை வெளியிட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசியை ஏற்றுவது ஏன் அவசியமாகின்றது?

உங்களுக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதிருப்பினும் நீங்கள் நோய்க்காவியாக இருக்கக் கூடும். உங்களிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவ இடமுண்டு. நீங்கள் தடுப்பு மருந்தைப் பெறுவதன் மூலம் உங்களை பாதுகாத்துக் கொள்வது மட்டுமின்றி, சமூகத்தையும் பாதுகாக்க உதவுகின்றீர்கள். மேலும் இது கொவிட்-19 பரவலை ஒழிக்கும் போராட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாவதால் தடுப்பூசி ஏற்றுவது அனைவரினதும் ஒரு சமூகப் பொறுப்பாகும்.

கொவிட்-19 நோய்க்கு எதிரான தடுப்பு மருந்து என்றால் என்ன?

கொவிட்-19 வைரஸில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான எளிமையான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் மிக்க ஒரு வழிமுறை இதுவாகும்.கொவிட்-19 வைரசுக்கு எதிராக உடலில் இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தி கட்டியெழுப்பப்படுகின்றது.உங்கள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் வலுவூட்டுகின்றது.

2020 டிசம்பர் மாதம் நடுப் பகுதி அளவில் கொவிட்-19 வைரசுக்கு எதிராக 56 வகையான தடுப்பு மருந்துகள் மதிப்பீடுகளுக்காக பயன்படுத்தபட்டுள்ளன. மேலும் 166 வகையான தடுப்பு மருந்துகள் முன்சிகிச்சை நிலைய மதிப்பீடுகளுக்காக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து மட்டுமே உலக சுகாதார நிறுவனத்தின் அவசர நிலை அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. (2021 ஜனவரி 24 ஆம் திகதியன்று)

இருப்பினும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மருந்து வகைகளை கட்டுப்படுத்தும் அதிகார சபைகள் அவரவர் நாட்டில் தேசிய மட்டத்தில் பயன்படுத்துவதற்காக மருந்து வகைகளுக்கு அனுமதி வழங்கலாம். தடுப்பு மருந்துகள் குறிப்பிட்டளவே தற்போது இருப்பதால் இதை வழங்குவதில் கீழ்க் காணும் பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும்:

தடுப்பூசி ஏற்றிக்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பின்வருமாறு:

கொவிட்-19 தாக்கும் சாத்தியம் குறைகின்றது.கொவிட்-19 தொற்றினாலும் அதன் பாதிப்பு குறைகின்றது.கொவிட்-19 காரணமாக உயிரிழப்புகள் குறைகின்றன. பிறருக்குத் தொற்றும் வாய்ப்பு குறைகின்றது. தடுப்பூசி மிக முக்கியம் என்றாலும் கீழேஉள்ளவற்றை நாம் மறந்து விடக் கூடாது. அத்துடன் தடுப்பூசி எவ்வளவு காலத்திற்கு பாதுகாப்பை வழங்கும் என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

தடுப்பூசி அவசியமென்பது ஒருபுறமிருக்க, கொவிட்-19 பரவுவதைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை தொடர்வதும் மிக அவசியமாகும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணல், கைககளை அடிக்கடி கழுவிக் கொள்ளல் ஆகியனவே அவையாகும்.

தடுப்பூசியை யார் பெறலாம்?

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் (கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் அல்லாதவர்கள்)அனைவரும் தடுப்பூசியை பெற வேண்டும். ஆனால் தடுப்பு மருந்து வகைகளுக்கு ஒவ்வாமை (அ​ேலர்ஜி) உள்ளவர்கள், ஏனைய மேற்கத்தேய மருந்து வகைகள் அல்லது உணவு வகைகளுக்கு ஒவ்வாதவர்கள் இந்த தடுப்பு மருந்தை மருத்துவ கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில்பெறுதல் நல்லது.

வயோதிபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது ஏன்?

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தொற்றும் சாத்தியம் அதிகம் உள்ளது. வயது அதிகரிக்க கொவிட்-19 தொற்றும் ஆபத்து அதிகரிக்கின்றது. எனவே இவர்களுக்கு தடுப்பூசி அவசியம்.

பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், 18 வயதை விடக் குறைந்தவர்கள்,

முன்னர் தடுப்பு மருந்து எடுக்கும் போது சிக்கல்கள் தோன்றியவர்கள் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஒவ்வாமை தொடர்பான வரலாறு உள்ளவர்கள் மருத்துவமனையில் தங்கி மருத்துவ கண்காணிப்பின் கீழ் தடுப்பு மருந்து பெறுவது சிறந்தது.

தடுப்பூசி பெற்றதன் பின்னர் கண்காணிப்பின் கீழ் 20 நிமிடம் அமர்ந்திருத்தல் வேண்டும். இரண்டாவது தடவை தடுப்பூசி பெற வேண்டிய திகதி தெரியப்படுத்தப்பட்டு அதை பதிவு செய்தல் வேண்டும்.

காய்ச்சல் போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பானஅறிவுரைகளை தடுப்பூசி பெற்றவருக்கு தெளிவாக வழங்கி தொடர்பு கொள்ள வேண்டியஅவசர தொலைபேசி இலகக்கங்கள் ஏதும் இருப்பின் அவற்றையும் கொடுத்தல் வேண்டும். தடுப்பு மருந்து மூலம் கணிசமான பாதுகாப்பு கிடைக்கும் எனக் கூறலாம்.

ஒரு தடவை நீங்கள் கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டு குணமடைந்திருந்தாலும், மறுபடியும் அதற்கு நீங்கள் இலக்காகலாம்.ஆனால் தடுப்பு மருந்தைப் பெற்றால் நோய் தொற்றினாலும் அதன் தீவிரம் குறைவாகவே இருக்கும்.

எனவே நோயில் இருந்து குணமடைந்தவர்களும் தடுப்பு மருந்தை பெறுவதே விவேகமாகும். ஆனால் கொவிட்-19 தொற்று உடலில் இருக்கும் போது தடுப்பூசியை பெறுதல் கூடாது. அதில் இருந்து குணமடைந்து குறைந்த பட்சம் இரு வாரங்கள் செனறதன் பின்பே தடுப்பூசி ஏற்ற வேண்டும்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...