ரூ. 1,000: சம்பள நிர்ணய சபையுடன் முதல் சுற்று பேச்சு பெப். 06 இல்

ரூ. 1,000: சம்பள நிர்ணய சபையுடன் முதல் சுற்று பேச்சு பெப். 06 இல்-Jeevan Thondaman-Rs 1000 Plantation Workers Salary Issue

- கம்பனிகளின் அடக்குமுறை, அதிகாரப் போக்கு குறித்து இ.தொ.கா. கண்டனம்
- 4 வருடங்களுக்கு ஒரு தடவை கூட்டு ஒப்பந்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை

தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் முதல் பேச்சுவார்த்தை பெப்ரவரி மாதம் (06) ஆம் திகதி காலை நடைபெறவுள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

அத்துடன் பெருந்தோட்ட துறை கம்பனிகளின் அடக்கு முறைகள் மற்றும் அதிகாரப் போக்குகளை கண்டிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயாராகி வருவதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் பெருந்தோட்ட கம்பனிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட சக்தியுடன், தொழிற்சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கவும் இ.தொ கா தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெகு விரைவில் இதற்கான அழைப்பை விடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர்மட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கம் தலையிட்டுள்ள நிலையில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு, சம்பள நிர்ணய சபைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்

இதற்காக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரமும் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயம் தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் முதல் பேச்சுவார்த்தை அடுத்த மாதம் (06) ஆம் திகதி காலை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் (29) ஆம் திகதி கொழும்பில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பள விடயம் உள்ளிட்ட, தொழிலாளர்களின் பொது நலன் உரிமை தொடர்பில் இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற பேச்சுவார்த்தை ஓரளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ள போதிலும் அதில் கம்பனிகள் தரப்பில் முன்வைக்கப்பட்ட முடிவுகள் பல ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அதன்படி தொழிலாளர்கள் தற்போது பறிக்கும் கொழுத்துக்கு மேலதிகமாக 02 கிலோ அதிகரிக்க வேண்டுமெனவும்,

அடுத்து வரும் கூட்டு ஒப்பந்த காலத்தை 04 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யவும் கம்பனிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதை ஒருகாலமும் இ.தொ கா ஏற்றுக்கொள்ளாதென தெவித்த இராஜாங்க அமைச்சர், அதேநேரத்தில் பெருந்தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களை மேலும் அடக்கு முறைகளுக்கு ஆளாக்க யோசனைகளை முன்வைப்பதை ஏற்க முடியாதென்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.


There is 1 Comment

Add new comment

Or log in with...