ODI, T20 தொடர்களுக்காக ஜூன் - ஜுலையில் இலங்கை அணி இங்கிலாந்துக்கு

இலங்கை கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூன் – ஜுலை மாதப் பகுதியில், இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் 20க்கு20 தொடர்களில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு20 தொடர்களில் விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, குறித்த தொடருக்கு செல்லவுள்ள இலங்கை அணி ஜூன் 15ஆம் திகதி இங்கிலாந்தை அடையவுள்ளது. அங்கு செல்லும் இலங்கை அணி தங்களுடைய முதல் 20க்கு20 போட்டியில் ஜூன் 23ஆம் திகதி விளையாடவுள்ளது. பின்னர் இரண்டாவது 20க்கு20 போட்டி ஜூன் 24ம் திகதி நடைபெறவுள்ளது.

முதல் இரண்டு போட்டிகளும் கார்டிப்பில் உள்ள ஷோபியா கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், மூன்றாவது போட்டி 26ஆம் திகதி சௌதெம்டனில் உள்ள ஏஜஸ் போவ்ல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பின்னர், முதல் ஒருநாள் போட்டியானது 29ஆம் திகதி டர்ஹாமில் உள்ள ரிவர்ஸைட், எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி ஜுலை முதலாம் திகதி லண்டனின் கியா ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடரின் மூன்றாவதும், இறுதிமான ஒருநாள் போட்டி ஜுலை 4ஆம் திகதி பிரிஸ்டோல் கௌண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர் நிறைவடைந்த அடுத்த நாள் இலங்கை அணியானது மீண்டும் நாடு திரும்பும் என இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இங்கிலாந்து அணி தொடரை 2-–0 என கைப்பற்றியுள்ளது.


Add new comment

Or log in with...