2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழா கை விடப்பட்டது | தினகரன்

2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழா கை விடப்பட்டது

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடத்த முடியாமல் போன 32ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை இந்த வருடம் மார்ச் மாதம் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

நாட்டில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் தொடர்ந்து நீடிப்பதால் 2020 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை இரத்து செய்வதற்கு தீர்மானித்ததாக அதன் தலைவரும், பணிப்பாளர் நாயகமுமான துஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களை விட 2021 இற்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவை ஐந்து நாட்கள் நடத்துவதற்கும், பரிசுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

முன்னதாக, 2020 தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டிகள் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஹெய்யன்துடவையில் வெற்றிகரமாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் துஷார ஜயசிங்கவின் தலைமையில் மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைமையகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பத்திரிகைகளுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,

“இதுவரை நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பில் என்னால் திருப்தி அடைய முடியாது. அதனால் என்னுடைய நிர்வாக காலத்தில் இதில் பங்கேற்கின்ற விளையாட்டு வீரர்களுக்கு அதிகளவான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகையை அதிகரிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நிச்சயம் முன்னெடுக்கவுள்ளேன்.

2021இல் வடக்கின் விளையாட்டிற்கு பாரிய வேலைத்திட்டங்கள்

அத்துடன், மெய்வல்லுநர் போட்டிகளில் அதிகளவு வீரர்கள் கிராமப் புறங்களில் இருந்து வந்து பங்குபற்றுகின்றனர். எனவே, அதில் வெற்றி பெறுகின்ற வீரர்களுக்கு சான்றிதழுக்கு பெறுமதி சேர்க்கும் வகையில் மெய்வல்லுநர் போட்டிகளை கட்டாயம் செயற்கை ஓடுபாதையில் நடத்தவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

உண்மையில் கடந்த 2019இல் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது வெற்றியீட்டிய வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுகளை பார்த்த போது நான் மிகவும் வெட்கப்பட்டேன். வெற்றியீட்டிய வீரர்களுக்கு பணப் பெறுமதி குறிப்பிட்ட பெரிய காட்போட்களை கையில் வழங்கி ஆயிரம் ரூபா பணத்தை வழங்குவதை நான் கண்கூடாகப் பார்த்தேன்.

அடுத்து வருகின்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் வெற்றி பெறுகின்ற வீரர்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபாவை பரிசாக வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெறுகின்ற மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான தேசிய விளையாட்டு விழாவுக்குப் பிறகு அரசாங்கத்தின் பூரண பங்களிப்புடன் அதிகளவு போட்டியாளர்கள் பங்குபற்றுகின்ற ஒரு விளையாட்டு விழாவாக தேசிய இளைஞர் விளையாட்டு விழா நடைபெற்று வருகின்றது.

சுகாதார வழிகாட்டல்களுடன் 2021இல் விளையாட்டுப் பயிற்சிகள்

இதில் நாடு பூராகவும் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களில் அங்கத்தவர்களாக உள்ள 25 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களுக்கும் பங்குபற்ற முடியும். இலங்கையைப் பொறுத்தமட்டில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் இளைஞர் கழகங்கள் இயங்கி வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இந்த வருடத்துக்கான தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் பிதேச செயலக மட்டத்திலான முதல் கட்ட தெரிவுப் போட்டிகளை பெப்ரவரி மாதம் முதல் நடத்துவதற்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தீர்மானித்துள்ளது.


Add new comment

Or log in with...