பொய் தகவலை எதிர்கொள்ள ட்விற்றரில் முன்னோடித் திட்டம் | தினகரன்

பொய் தகவலை எதிர்கொள்ள ட்விற்றரில் முன்னோடித் திட்டம்

ட்விற்றர் நிறுவனம் பொய்த்தகவலை எதிர்கொள்ளும் பணியில் அதன் பயனீட்டாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டம் ஒன்றை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது.

சமூக ஊடகங்களில் பரவும் பொய்த் தகவல் கட்டுப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள நிலையில் ட்விற்றர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பேர்ட்வொட்ச் எனும் அந்தத் திட்டம் ட்விற்றர் தளத்தில் உள்ள தனி அம்சமாகச், சோதனை அடிப்படையில் செயல்படவுள்ளது.

திட்டத்தின் கீழ் பயனீட்டாளர்கள் பொய்த் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகளை அடையாளம் கண்டு அதற்கு விளக்கம் அளிப்பார்கள்.

அவர்களின் குறிப்புகளை தொடக்கத்தில் முன்னோடித் திட்டத்தில் பங்கேற்பவர்களால் மட்டுமே ட்விற்றரில் அணுகமுடியும். குறிப்புகள் அனைத்தையும் அவர்களால் மதிப்பீடு செய்யவும் முடியும்.

பயனீட்டாளர்களின் குறிப்புகள் பின்னர் உலகளாவிய பயனீட்டாளர்களின் பார்வைக்கு வெளியிடப்படும் என்று ட்விற்றர் கூறியது. பொய்த்தகவலைக் கையாள்வதற்கு பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களின் பங்கைப் பெற விரும்புவதாகவும் அதற்கு சமூக- அடிப்படையிலான அணுகுமுறை உதவும் என்று நம்புவதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

அணுகுமுறையில் ஏற்படக்கூடிய சில சவால்கள், முன்னோடித் திட்டத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று அது கூறியது.


Add new comment

Or log in with...