கிளிநொச்சி வலைப்பாடு வாள்வெட்டு தாக்குதல்; சாட்சியங்களை மறைக்க முயற்சியா?

 - பாதிக்கப்பட்டவர்கள் கவலை

கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் உள்ள குடும்பம் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான சாட்சியங்களை மறைக்க பொலிசார் முயற்சிப்பதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.  

கிளிநொச்சி ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலைப்பாடு பதியில் உள்ள குடும்பம் மீது கடந்த 18 ஆம் திகதி நள்ளிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசார் நீதியான விசாரணை மேற்கொள்ளவில்லை எனவும், சாட்சியங்களை மறைக்க முற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.  

அதே பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஏ.போல்ராஜ் மற்றும் அவரது மனைவி, பாடசாலை மாணவனான அவரது மகன் உள்ளிட்டோர் இவ்வாறு தாக்குதலிற்குள்ளானதாகவும், பொலிசார் நீதியான விசாரணை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். 

நவம்பர் மாதம் இரவு 1 மணியளவில் 119 இலக்க அவசர அழைப்புக்கு தகவல் வழங்கியதாகவும், அதன் பின்னர் வெள்ளம் காரணமாக பொலிசார் அவ்விடத்திற்கு உடனடியாக வரமுடியாதுள்ளதாக தெரிவித்ததாகவும் பின்னர் காலையே அவர்கள் வருகை தந்ததாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். 

சம்பவத்தில் காயமடைந்தவர்களை அயலவர் மற்றும் உறவினர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் காலை வந்த பொலிசார் தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் தடய பொருட்களை எடுத்து சென்றதாகவும் அன்று மாலை தடயவியல் பொலிசார் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட நபர்களின் வாக்குமூலத்திற்கு அமைவாக விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.  

மாறாக தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் நடமாடியதற்கான சிசிரிவி காட்சிகள் உள்ளிட்ட தடய பொருட்கள் மற்றும் சான்றுகளை மறைக்க முற்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

இவ்வாறான நிலையில் தாக்குதலிற்கு திட்டமிட்ட நபர் தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற ஓரிரு நாட்களிற்கு முன்னர் இவ்வாறான சம்பவம் ஒன்று நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், அதற்கான சாட்சிகள் உள்ள நிலையில் பொலிசார் ஏன் குறித்த சந்தேக நபர் மீது விசாரணை மெற்கொள்ளவில்லை என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர். 

இந்த நிலையில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், தாக்குதல்தாரிகளை கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 

பரந்தன் குறூப் நிருபர்   


Add new comment

Or log in with...