கழிவுகள் கொட்டப்படும் இடமாக மருதமுனை இஸ்லாம் நகர் வீதி

கல்முனை பிரதேசத்தின் மருதமுனை மேட்டுவட்டை, இஸ்லாம் நகர் பிரதான வீதியின் இரு ஓரங்களிலும் பல்வேறு கழிவுப்பொருட்கள் இனந்தெரியாத நபர்களால் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வீதியில் பயணிக்கும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மருதமுனை பிரதேசம் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் அம்பாறை மாவட்டத்தில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டது. பலர் தமது உறவுகளையும், உடைமைகளையும், வாழ்விடங்களையும் இழந்து நிர்க்கதியாகினர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஊரின் மேற்குப் பகுதியில் காணப்பட்ட மேட்டுவட்டை வயல் நிலங்களில் புதிய வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் பிரான்ஸ் சிட்டி, 65 மீற்றர் வீட்டுத் திட்டம், இஸ்லாம் நகர் போன்ற வீட்டுத் திட்டங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

இந்த வீட்டுத் திட்டங்களில் குடியேறிய மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இஸ்லாம் நகர் கிராமத்துக்குச் செல்லும் பிரதான வீதியின் வலது புறமாக நவீயான் குளம் அமைந்துள்ளது. இந்தக் குளத்தை அண்டிய பிரதான வீதி ஓரங்களில் பல்வேறு கழிவுப் பொருட்கள் இனந்தெரியாத நபர்களால் தினமும் கொட்டப்பட்டு வருகின்றன. வீட்டுக் கழிவுகள், இறைச்சிக்காக வெட்டப்படும் கோழிகள் மற்றும் மாடுகளின் எச்சங்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், குழந்தைகளுக்குப் பயன்படுத்திய பம்பஸ் என எழுதுவதற்குக் கூட அருவருப்பான கழிவுகள் நாளாந்தம் மூட்டை மூட்டையாக அங்குள்ள வீதியோரத்தில் குவிகின்றன. இதனால் அழகிய சுற்றாடல் அசுத்தப்படுத்தப்படுகிறது. மழை காலங்களில் வீதியால் பயணிக்க முடியாமல் உள்ளது. பறவைகளால் அங்கும் இங்குமாக கழிவுகள் தூக்கி வீசப்படுகின்றன.

மஸ்ஜிதுல் இஸ்லாம் மற்றும் றஹ்மத் பள்ளிவாசல்கள், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி, பிரதேச வைத்தியசாலை மற்றும் ஏனைய வீட்டுத் திட்டங்களுக்கு பயணிப்பதற்கும் இந்த வீதியையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றார். இந்நிலையில் இந்த வீதி ஓரங்களில் கொட்டப்படும் நாளாந்த கழிவுகளினால் வீதியில் பயணிக்கும் பொதுமக்கள், சிறுவர் - முதியோர் என பலரும் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

சூழலை பாதுகாப்பதற்கான பல்வேறு சட்டங்கள், நடவடிக்கைகள் உருவாக்கப்படுவதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதும் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்காகவே ஆகும். ஆனாலும் இவற்றை புறம்தள்ளி சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு இல்லாத சில சுயநலமிகளால் சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகின்றது. மானிடப் பண்பு இல்லாத இவர்களை யாரிடம் முறையிடுவதென்று தெரியவில்லை.

இஸ்லாம் நகர் பிரதேசத்தை சுத்தப்படுத்தி, சூழலை அழகுபடுத்துவதற்காக இஸ்லாம் நகர் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் சமூக அமைப்புக்கள், இளைஞர்களால் சில வேலைத் திட்டங்கள் சில காலத்திற்கு முன்னர் முன்னெடுக்கப்பட்டன. எனினும் அவை வெற்றியளிக்கவில்லை.

இஸ்லாம் நகர் கிராமத்தில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு எதிராக பொலிசாரினால் எச்சரிக்கை பதாகை ஒன்றும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. எனினும் அதனால் பயன் எதுவுமே இல்லை. இரவு வேளைகளிலும், மக்கள் நடமாட்டம் இல்லாத நேரங்களிலும் மூட்டை மூட்டையாக குப்பைகளை கொண்டு வந்து இங்கே குவிக்கிறார்கள் என பொதுமக்கள் பலரும் குற்றம் காட்டுகின்றனர்.

இவ்வாறான சுயநலம் அற்ற செயல்களில் ஈடுபடுவோரை சி.சி.ரிவி கமராக்களின் உதவியோடு அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இதற்கு சமூக மட்டத்தில் உள்ள சிவில் அமைப்புக்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர், சமூக உணர்வுமிக்க ஆர்வலர்கள் என அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.

ஏ.எல்.எம். ஷினாஸ்
(பெரியநீலாவணை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...