மோட்சத்தை உறுதி செய்வதற்கு உபகாரமாக அமையும் காரணிகள்

மோட்சத்தை உறுதி செய்வதற்கு முயற்சிக்கும் போது நற்குணங்கள் நன்கு வளர்ச்சியுற்று இருக்க வேண்டும். அதற்கு ஐந்து காரணிகள் உபகாரமாக அமையும். முதலாவது விடயம்தான் சத்புருஷர்களுடனான பழக்கம். சத்புருஷர்களுடனான பழக்கத்தினால்தான் தன்னிடம் வளர்க்க வேண்டிய நற்குணங்கள், குண தர்மங்கள் என்பன மேம்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவது விடயம்தான் சீலமிகுந்தவராக (ஒழுக்கமுடையவராக) வேண்டும் என்பதாகும். உபசம்பதா பிக்கு என்றால் அவர் தனது உபசம்பதா சீலத்தை நன்கு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான சீலத்தை உடையவராக வேண்டும். சிறிய பிழைக்கும் பயம் கொள்ள வேண்டும். அனுஷ்டித்த சீலங்களை நன்கு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் மோட்சத்தை அடைவதற்கான தகுதியை தம்முள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

மூன்றாவது விடயம் இதுதான். 32 வகையான அர்த்தமற்ற பேச்சுக்களை தவிர்த்து பத்து வகை பேச்சுக்களை பேச வேண்டும். அந்த பத்து வகை பேச்சுக்கள் உய்த்துணர்வுடன் உலகை வெறுக்கச் செய்யும். அந்த பத்து வகை பேச்சுகள் என்றால் இவையே (அல்பேச்ச பேச்சு): கிடைத்ததை நினைத்து இன்புறும் பேச்சு, தனிமையான ஓய்வு பற்றிய பேச்சு, கூட்டத்துடன் ஒன்றாக பிணைந்து வாழாமை தொடர்பான பேச்சு, கிலேசங்களை அழிப்பதற்கு மிகுந்த வீரியம் எடுப்பது தொடர்பான பேச்சு, அதேபோல் சீலம் சமாதி பிரக்ஞை விடுதலை மற்றும் விடுதலை ஞான காட்சி என்பன தொடர்பாக கேட்கவும் பேசவும் வேண்டும். அப்போதுதான் அவர் மோட்சத்தினை அடைய தகுதியுடைய ஒருவராவார்.

நான்காவது விடயம் தான் முயற்சி. எந்நேரமும் தொடங்கிய வீரியம் இருக்க வேண்டும். அகுசலங்களை அழிப்பதற்கும் குசல தர்மங்களை தோற்றுவித்து கொள்வதற்கும் பலமான வீரியம் இருக்க வேண்டும். இந்த விடயங்கள் மோட்சத்தை அடைய விரும்பும் ஒருவருக்கு மிகவும் உறுதுணையாக இருப்பவையாகும்.

ஐந்தாவது காரணிதான் பிரக்ஞை எனப்படும் ஞானமாகும். அவர் ஞானமுள்ள ஒருவராகவும் வேண்டும். அந்த ஞானமுள்ளவர் எந்நேரமும் அறிவினால் ஆராய்ந்து கொண்டே இருப்பார். விசேடமாக கூறினால இவ்வனைத்தினதும் தோற்றம், அழிவு என்பனவற்றை அவ்வாறே காண முயற்சி செய்வார். துக்கத்திற்குரிய அனைத்தினது மீதும் கொண்ட விருப்பு இல்லாமல் போகும் வண்ணம் அநித்திய உலகை அவ்வாறே காண முயற்சி செய்வார். இதுதான் அவருடைய ஞானம். இவ்வாறானவர்தான் மோட்சத்தினை அடைவதற்கு தகுதியானவர ஆவார்.

இந்த ஐந்து விடயங்களை தன்னுள் ஏற்படுத்தி கொள்ளும் ஒருவர் இன்னும் நான்கு விடயங்களையும் தன்னுள் தோற்றுவித்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அதாவது மனதில் தோன்றும் காமம் தொடர்பான, ஆசை தொடர்பான அகுசலங்களை அழிப்பதற்கு அசுப தியானத்தை செய்ய வேண்டும். அதே போல் மனதில் தோன்றும் கோபம் போன்ற விடயங்களை அழிப்பதற்கு மைத்ரீ தியானத்தை செய்ய வேண்டும்.

மனம் சிதறும் போது அந்த விதர்க்கங்களை அழிப்பதற்கு ஆனாபானசதி எனும் தியானம் உபகாரமாகும்.

அதேபோல் தன்னுள் இருக்கும் மமதை செருக்கு என்பன அழிவதற்கு அநித்திய தியானம் மிகவும் உபகாரமாக இருக்கும். அநித்திய தியானத்தை நன்கு பயிற்சி செய்யும் ஒருவரால் அனாத்ம நிலையை நன்கு உணரலாம். அனாத்ம நிலையை நன்கு உய்த்துணரும் போது மமதை முழுமையாக அழிந்து விடும். இந்த வாழ்விலேயே மோட்சத்தை உறுதி செய்தவராகலாம்.

இவ்வாறாக அறிவுரை செய்த புத்த பகவான் பின்வருமாறு செய்யுள்களை அழகாக போதித்துள்ளார்.

இந்த மனம் பதற்றம் நிரம்பியது போன்றே மிகவும் சபலமானதும் கூட. பாதுகாப்பதும் பாவத்திலிருந்து மீட்பதும் மிகவும் கடினமானதே. ஆனாலும் அறிவுள்ளவர் இரும்புகொல்லன் வளைந்த அம்பை நிமிர்த்துவது போல் தர்மத்தினுள் இந்த மனதை நிமிர்த்தி கொள்வார்.

நீரிலிருந்து வெளியே எடுத்து வைத்த மீனை போல் சுக துக்கம் வரும் போதெல்லாம் இந்த மனம் துடிக்கிறது. எந்நேரமும் சஞ்சலமடையும் இதனை நன்கு அறிந்து அடக்க வேண்டும். மாரனது பிணைப்பிற்கு உட்படாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

(தம்மபதம் சித்த வர்க்கம்)

மேலும் தர்மத்தை கற்றுக்கொள்ள Tamil Buddhist முகநூல் பக்கத்துடன் இணையுங்கள்.


Add new comment

Or log in with...