உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு | தினகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு விசாரணைகள் நிறைவு-PCoI-Easter Sunday Attack Commission Concluded Its Hearing-Report Due on Jan 31

- ஜனவரி 31 அல்லது அதற்கு முன் அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பணிகள் இன்றுடன் (27) உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளன.

ஐவர் கொண்ட குறித்த ஆணைக்குழுவினால், இதுவரை 457 சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இறுதியாக நேற்றையதினம் ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளித்த சிஐடியின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி இருப்பதாக உணருவதாக தெரிவித்திருந்தார்.

உயிர்த்த ஞாயிநு தாக்குதல் இடம்பெற்ற வேளையில் சிஐடியின் பணிப்பாளராக இருந்த ஷானி அபேசேகர, தற்போது சிகிச்சை பெற்று வரும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் 42ஆவது வார்டில் இருந்தவாறு வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று (26) இரண்டாவது நாளாக குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியம் அளித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்த நிலையில் ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கையிடுதல் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அதற்கமைய, எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தனது அறிக்கையை குறித்த ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...