"கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" | தினகரன்

"கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது"

இறைவாக்கினர் யோனா வின் எச்சரிக்கைக்குச் செவிமடுத்து நினிவே நகர மக்கள் சாக்கு உடுத்தி சாம்பலில் அமர்ந்து உண்ணாமலும் குடியாமலும் நோன்பு இருந்தனர்.

அவர்கள் மனமாறியதைக் கண்ட கடவுள் அவர்களை அழிக்காமல் பாதுகாத்தார். பிற இனத்தைச் சார்ந்த நினிவே மக்களும் கடவுளுக்கு அஞ்சி மனம் மாறினர். மனிதர் மனமாற முடியும், மனமாறவும் வேண்டும்

"காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி விட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" (மாற் 1:15) தமது நற்செய்திப் பணியின் தொடக்கத்தில், கிறிஸ்து மக்களை மனமாற்றத்திற்கு அழைத்தார்.

மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை, "என் பின்னே வாருங்கள்" (மாற் 1:17) என்று அழைத்தார். அவர்களும் உடனே தங்கள் படகுகளையும் வலைகளையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர், அவர்கள் நம்பியிருந்த கடலை விட்டுவிட்டு முன்பின் தெரியாத கிறிஸ்துவைப் பின்பற்ற முன் வந்தது மனமாற்றமல்லவா? மனிதர் மனமாறவேண்டும் மனமாறவும் முடியும்,

விவிலியம் சுட்டிக்காட்டும் மனமாற்றம் ஆழமான அடிப்படையான மனமாற்றம் அது உள்மனமாற்றம், இதயமாற்றம், "நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ளவேண்டாம் இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்" (யோவே 2:13). கடவுள் ஒருவரையே நமது வாழ்வின் மையமாகவும் ஒப்பற்ற செல்வமாகவும் கருதி வாழ்வதே உண்மையான மனமாற்றம் கடலையும் மீனையும் நம்பி வாழ்ந்த மீனவர்கள் இயேசுவைப் பின்பற்றத் துணிவுடன் முன்வந்தனர். இனி அவர்கள் வாழ்வின் மையம்கடல் அல்ல. கடவுளே!

இன்றைய மனிதரின் மையம் பணமே, இன்றைய உலகின் பாவத்தை "அங்காடியின் சிலைவழிபாடு" என்கிறார் திருத்தந்தை இரண்டாம் ஜோன்போல், உலக சந்தையும் உலக வங்கியும் தான் இன்று நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன.

ஒருவர் எப்படி இருக்கிறார் என்பதைவிட அவர் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதே முக்கியம். சமூக ஊடகங்களும் தேவையற்ற தேவைகளை உருவாக்கி, நுகர்வுக் கலாசாரத்திற்கு மனிதரை அடிமையாக்கிவிட்டது.

பணம் வாழ்வுக்குத் தேவைதான் "இனிமையான இல்லறத்திற்குத் தேவையானது பணமா? பாசமா?" என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், பணம்தான் தேவை என்று பேசியவர், "பொருட்பால் இல்லையென்றால், காமத்துப்பாலும் வாங்கமுடியாது. ஏன், ஆவின்பால் கூட வாங்கமுடியாது" என்று அடித்துப் பேசினார்!

இவ்வுலகச் செல்வங்களை நாம் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று வேதாகம வாசகத்தில் அறிவுறுத்துகின்றார் புனித பவுல், "உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர்போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பதுபோல் நெடுநாள் இராது" (1கொரி 7:31)

இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும்போது அதிலே மயங்கி விடலாகாது.

இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு ஒரு இரவு மட்டும் தேவைப்பட்டது. ஆனால் எகிப்தை அவர்களது இதயத்திலிருந்து விடுவிக்கக் கடவுளுக்கு 40 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆம், எகிப்து நாட்டின் வெள்ளரிக்காய், வெங்காயம், வெள்ளைப்பூண்டு. இறைச்சி அம்மக்களின் இதயத்தை விட்டு அகலவே இல்லை. ஏனெனில், "வயிறே அவர்கள் தெய்வம்" (பிலி 319) எனவே இவ்வுலகச் செல்வங்களை ஞானத்துடன் பயன்படுத்தி விண்ணக நலன்களைப் பெறவேண்டும். "நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது" (மத் 6:24). ஆண்டவரின் இந்த அருள்வாக்கு நமது மனமாற்றத்திற்கு ஓர் அறை கூவல்.

இருதயராஜ்


Add new comment

Or log in with...