மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4000 ஐ தாண்டும் அபாயம் | தினகரன்

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4000 ஐ தாண்டும் அபாயம்

மத்திய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3937 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்திலிருந்து 2535 பேர் பதிவாகியுள்ளனர். அதுபோன்று நுவரெலியா மாவட்டத்தில் 857 தொற்றாளர்களும், மாத்தளை மாவட்டத்தில் 545 தொற்றாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நேற்று (25) காலை 6.00 மணிக்கு முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாகாணத்திற்குள் மொத்தம் 108 புதிய தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி கண்டியிலிருந்து 35, பேரும், நுவரெலியாவிலிருந்து 45 பேரும் , மாத்தளைலிருந்து 28 பேரும் புதிய தொற்றாளர்களாக பதிவாகியுள்ளனர்.

மேலும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலேயே கொரோனா தொற்று காரணமாக அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கண்டி மாவட்டத்தில் இதுவரை 18 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 04 பேரும் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இருவருமாக மொத்தம் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்டி மாவட்டத்தில் எட்டு இடங்களில் சிகிச்சைஅளிக்கப்பட்டுவருகின்றது. இந்தவகையில் இந்நிலையங்களில் நேற்று காலை 6.00 மணி வரையுள்ள காலத்தினுள் புதிதாக 106 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 99 பேர் பூரண சுகத்துடன் சிகிச்சை நிலையங்களிலிருந்து வெளியாகியுள்ளனர். மேலும் அனைத்து சிகிச்சை நிலையங்களிலும் தற்பொழுது 1092 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக மேலும் தெரியவருகிறது.

இதேவேளை கண்டி தேசிய வைத்தியசாலையில் தினந்தோரும் சுமார் 1500 பீ.சி.ஆர். பரிசோதனைகள் வீதம் இதுவரை 75,000 ற்கும் மேற்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.ரூ. 8 மில்லியன் மதிப்புள்ள தானியங்கி நியூக்கிளிக் அமிலம் பிரித்தெடுக்கும் பி.சி.ஆர் இயந்திரத்தை அன்பளிப்புச் செய்யும் வைபவத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர்மேலும் தெரிவிக்கையில் -பொதுவாக யாழ்ப்பாணம் முதல் ஹம்பாந்தோட்டை வரையில் உள்ள அனேக மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் மாதிரிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்காக கண்டி தேசிய மருத்துவமனைக்கு அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.கோவிட் நோய்த்தொற்றுகளை அடையாளம் காண சளியுடனான படலங்களை இதற்கு முன்னர் இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் செயற்பாடு நடக்கவில்லை. ஆனால் தற்போது அன்பளிப்பாகக் கிடைக்கப் பெற்றுள்ள இயந்திரம் மூலம் மரபணு பிரித்தல் செயல்முறைக்கான மாதிரிகளில் இருந்து தானியங்கி நியூக்ளிக் ஆசிட் பிரித்தெடுத்தல் இயந்திரம் தானாகவே அதனைப் பிரித்தெடுக்கும் என்றும் கூறினார்.

(எம்.ஏ.அமீனுல்லா, தம்புள்ள தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...