மக்களை மையமாக கொண்ட நீதிமன்ற முறைமை தேவை

மக்களை மையமாக கொண்ட நீதிமன்ற முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும். வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தி குறுகிய காலத்தில் தீர்ப்பு வழங்கும் வகையில் மறுசீரமைப்புகள் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நீதிமன்ற இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் நேற்று உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

வழக்கு விசாரணைகளில் உள்ள காலதாமதம் குறித்து நீண்டகாலமாக பேசப்படுகிறது. குற்றவியல் வழக்கொன்றிற்கு ஒன்பதரை வருடங்கள் செல்கிறது. மாவட்ட நீதிமன்றத்தில் பல வழக்குகள் 20 வருடங்களாக தேங்கியிருக்கின்றன. இதனை மாற்ற நீதித்துறை கட்டமைப்பை இற்றைப்படுத்த வேண்டும். தாய்லாந்தில் ஒருமில்லியன் மக்களுக்கு 65 நீதிபதிகள் உள்ளனர். இந்தியாவில் ஒரு மில்லியனுக்கு 20 நீதிபதிகள் இருக்கையில் இலங்கையில் ஒரு மில்லியனுக்கு 15 நீதிபதிகளே உள்ளனர். நீதிமன்றங்களை கணனிமயப்படுத்தி வீடியோ தொழில்நுட்பத்தினூடாக வழக்கு விசாரணை நடத்தி வருகிறோம். புதிய நீதிமன்ற இல்லத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கியது குறித்து ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நன்றி தெரிவிக்கிறோம்.

வழக்கு விசாரணை செய்யும் முறை,காலம் என்பன மாற்றப்பட வேண்டும். குறைந்த செலவில் மக்களுக்கு நியாயமாக தமது வழக்குகளை விசாரணை செய்து முடிக்கக்கூடிய நிலை உருவாக வேண்டும்.வாதத்திற்கான காலம் குறைக்கப்பட வேண்டும்.எமது நாட்டுக்கு உகந்த வகையில் புதுவிடயங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.அபராத தொகையை செலுத்த மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலையை மாற்றி ஒன்லைன் ஊடாக அதனை செலுத்த புதிய முறை கொண்டுவர வேண்டும்.மக்களை மையமாக கொண்ட நீதிமன்ற முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.நீதவான் நீதிமன்ற வழக்குகளை ஒரு வருட காலத்திலும் மேல் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை ஆறுமாத காலத்திலும் நிறைவு செய்யும் வகையில் மாற்றங்கள் இடம்பெற வேண்டியுள்ளது என்றார். (பா)

(ஷம்ஸ் பாஹிம்)


Add new comment

Or log in with...