நீதித்துறையை வளைக்க நாம் ஒரு போதும் முற்படவில்லை | தினகரன்

நீதித்துறையை வளைக்க நாம் ஒரு போதும் முற்படவில்லை

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்க  எமது அரசு அன்றும் இன்றும் தவறியது கிடையாது

'நீதிமன்ற இல்லம்' அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மஹிந்த உரை

ஒரு நாடு, ஒரு சட்டம் எனும் தேசிய அவசியத்தை நிறைவேற்ற நாம் அடித்தளமிட்டுள்ளோம். அதற்காக பொருத்தமான சட்ட வரையறைகளை அமுல்படுத்துவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.தமது அரசு ஆட்சிக்கு வந்த சகல சந்தர்ப்பங்களிலும் நீதித்துறை சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தனிப்பட்ட தலையீடுகளை செய்து நீதித் துறையை வளைக்க நாம் ஒரு போதும் முயலவில்லை என்றும் அவர் கூறினார்.

நீதிமன்ற இல்லத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அளுத்கடை நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இடம்பெற்றது.இங்கு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,

நீதிமன்ற இல்லம் நியாயத்தை நாடி வரும் மக்களுக்கான இல்லமாக அமைய வேண்டும்.

ஒரு நாடு ஒரு சட்டம் எனும் தேசிய மட்ட தேவையை நிறைவேற்றும் பணியில் அரசாங்கம் இறங்கியுள்ளது. வழக்கு தாமதத்தை தடுத்து செயற்திறனான முறையொன்றினை பிணக்குகளை தீர்க்க பயன்படுத்த வேண்டும்.அதற்கான காலங்கடந்த சட்டங்கள்,ஒழுங்கு விதிகள் என்பவற்றை மாற்றும் மனப்பாங்கு சகலருக்கும் வரவேண்டும்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் நீதித்துறை நாட்டின் பிரதான தேவையாகும். அதற்கான அடித்தளமாக இந்த நீதிமன்ற இல்லம் அமைக்கப்படுகிறது. நாட்டு மக்களுக்கு நாம் முன்வைத்த யோசனைகளுக்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது.பல்வேறு மறுசீரமைப்புகளுக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அரசியல் ரீதியில் எம்மிடையே எத்தகைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் நாட்டின் இறைமை மக்களிள் கைககளிலே உள்ளது. எமது அரசு ஆட்சிக்கு வந்த சகல சந்தர்ப்பங்களிலும் நீதித்தறை சுதந்திரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம்.

தனிப்பட்ட தலையீடுகளை செய்து நீதித் துறையை வளைக்க நாம் ஒரு போதும் முயலவில்லை.

அதனால் மக்களின் இறைமை.தேசிய பாதுகாப்பு மனித உரிமை சட்டத்தின் ஆட்சி,நாட்டின் ஆள்புல ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பு திருத்தம் என்பன தொடர்பில் மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். புதிய யாப்பிற்கான முன்னெடுப்புகள் இடம்பெறுகின்றன. காலங்கடந்த சட்டங்கள் ,ஒழுங்குவிதிகள்,கட்டளைகளினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நிலையை மாற்ற வேண்டும்.வழக்கு தாமதத்தால் மக்கள் மேல் பாரிய சுமையேற்றப்பட்டுள்ளது.

அளுத்கடை நீதித்துறை கட்டமைப்மை மாற்றுவது குறித்து 2014 இல் கவனம் செலுத்தப்பட்டது. புதிய நீதிமன்ற கட்டிட தொகுதி தவிர நாடளாவிய ரீதியில் 100 நீதிமன்ற கட்டடங்களை அமைக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.புதிய தொழில்நுட்பங்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது.இதனூடாக செயற்திறன் அதிகரிக்கும்.வழக்கு தாமதத்தை மாற்றி செயற்திறனுடன் பிணக்குகளை தீர்க்க வேண்டும்.

கடந்த 40 வருடங்களாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் தொகை அதிகரிக்கப்படவில்லை. அதனை 60 வீதத்தினால் அதிகரித்துள்ளது நாம் அடைந்த வெற்றியாகும்.அதனை மேலும் அதிகரிக்க வேண்டும்.

ஒரு நாடு ஒரு சட்டம் எனும் தேசிய அவசியத்தை நிறைவேற்ற நாம் அடித்தளமிட்டுள்ளோம். அதற்காக பொருத்தமான சட்ட வரையறைகளை அமுல்படுத்துவதற்கு சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜெயசூரிய,அமைச்சர்களான அலி சப்ரி, காமினி லொகுகே, பந்துல குணவர்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...