- மரணம் நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது - மக்கள் காங்கிரஸ் தலைவர் அனுதாபம்
கலை, இலக்கியத் துறையிலும்,ஊடகத்துறையிலும் தடம்பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரும், பன்னூலாசிரியரும், பிரபல எழுத்தாளருமான சாய்ந்தமருது எம்.எம்.எம்.நூறுல் ஹக் (வயது 57) நேற்று (25-) ஏறாவூரில் காலமானார்.
சுகவீனமுற்றிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் நாடறிந்த எழுத்தாளர். மிஹ்லார், செஞ்சுடர், இலக்கனி என்னும் புனைபெயர்களில் கட்டுரைகள், கவிதைகள், நூல் விமர்சனங்கள் என்பவற்றை எழுதியுள்ளார்.
இவர் சாய்ந்தமருது அல் -ஜலால் வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். இதுவரை ஏழு நூல்களை வெளியிட்டுள்ளார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவரது ஊடகப்பணிக்காக அண்மையில் 'வித்தகர்' விருது வழங்கி கௌரவித்தது. இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று திங்கட்கிழமை ஏறாவூரில் இடம்பெற்றது.
மரணம் நூறுல்ஹக்கை பிரித்துவிட்டது -மக்கள் காங்கிரஸ் தலைவர் அனுதாபம்
பன்னூலாசிரியர் நூறுல்ஹக் இறையடி சேர்ந்த செய்தியால், கடும் கவலையடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அன்னாரின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"எழுத்துப் பணியில் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த ஒரு நண்பனை நான் இழந்துவிட்டேன். அவரது இடைவெளியால், முஸ்லிம் சமூகத்தின் தனிப்பெரும் திறமையில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டது. அரசியல், சமூகவியல், இலக்கிய வெளிகளில் மர்ஹூம் நூறுல்ஹக்கின் ஆளுமைகள் பளிச்சிடுவதை அன்னாரின் படைப்புக்களில் பார்க்க முடியும்.
முஸ்லிம் பூர்வீகம் பற்றி மிகத் தெளிந்த சிந்தனைகளில் அவர் பணியாற்றியவர். சமூக, அரசியல் தலைமைகளை வழிகாட்டும் அளவுக்கு அவரது சிந்தனைகள் இருந்ததை என்னால் பெருமையுடன் ஏற்றுக்கொள்ள முடியும்.
கொழும்புக்கு வரும் நேரமெல்லாம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியிலோ என்னைத் தொடர்புகொள்ளும் அவர், முஸ்லிம் சமூகத்தின் சமகால, நிகழ்கால போக்குகள் பற்றிக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதுண்டு.
எம் எல்லோரது விதிகளிலும் பொதுவாக எழுதப்பட்டுள்ள மரணம் என்ற வாசலுக்குள் நூறுல்ஹக் சென்றுவிட்டார். இதுவும் இறைவனின் நாட்டம்தான் என்ற நம்பிக்கையில்தான் நான் ஆறுதலடைகிறேன். எல்லாம் வல்ல இறைவன் அன்னாரது பணிகளைப் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திப்பதுடன் குடும்பத்தார், நண்பர்கள், உறவுகள் அனைவருக்கும் இறைவன் பொறுமையை வழங்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
(மருதமுனை தினகரன், கல்முனை மத்திய தினகரன் நிருபர்கள்)
Add new comment