ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் ஒப்புதல் | தினகரன்

ஆய்வு செய்ய இந்திய அரசாங்கம் ஒப்புதல்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள இராமர் பாலத்தின் தோற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது.

48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன

இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக ராமர் பாலத்தை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். இந்துக்களின் அடையாளமாகவும், நம்பிக்கை சார்ந்த விடயமாகவும் இருப்பதால் ராமர் பாலத்தை இந்தியாவின் தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ராமர் பாலம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.


Add new comment

Or log in with...