மறுபரிசீலனை செய்யுமாறு அங்கஜன் சம்பந்தப்பட்ட அமைச்சிடம் கோரிக்கை

ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் பிரேரணை செய்யவுள்ளார்

வேலணைப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற நில ஆக்கிரமிப்புத் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் தரப்பினரை மறுபரிசீலனை செய்யக் கோருவோம் என யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். வேலணைப் பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு தலைமை தாங்கிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

தனியார் காணிகள் சுவீகரிக்கப்படுவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை. இச் செயற்பாடு இந்த அரசாங்கத்தில் மட்டும் நடக்கவில்லை. சென்ற அரசாங்கத்திலும் இச் செயற்பாடு இடம்பெற்றது. எமது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத நில ஆக்கிரமிப்பினை அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற அடிப்படையில் நிச்சயமாக சம்பந்தப்பட்ட அமைச்சிற்கு இச் செய்தியை கொண்டு செல்வேன். நில ஆக்கிரமிப்பு செயற்பாடு பிரதேச செயலரால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயத்தை செய்ய முடியாது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் உரிய தரப்பினரை வலியுறுத்துவோம்.

இன்னும் ஓர் விதத்தில் இவ் நில ஆக்கிரமிப்பு விடயத்தை எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. பல சட்டத்தரணி ஜாம்பவான்கள்,ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளனர். யாழிலும் இவ்வாறான ஜாம்பவான்கள் உள்ளனர்.எனவே இவ்விடயத்தை நீதிமன்றம் கொண்டு சென்று மக்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

அந்தவகையில் மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாட்டினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இப் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினையும் நிறைவேற்றுவோம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

சாவகச்சேரி விசேட நிருபர்


Add new comment

Or log in with...