ஆப்கான்-அமெரிக்கா இடையிலான அமைதி ஒப்பந்தம் மறுபரிசீலனை

தலிபான்களுடன் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் செய்து கொண்ட அமைதி உடன்படிக்கையை மறுபரிசீலனை செய்யவிருப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுடனான உறவை நிறுத்துதல் மற்றும் வன்முறையை குறைத்தல் உட்பட தலிபான்கள் தமது கடப்பாட்டுடன் செயற்படுவதை உறுதி செய்ய வேண்டி இருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இந்த மறுபரிசீலனை குறித்து ஜனாதிபதி பைடனின் முன்னணி பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவான் ஆப்கான் அதிகாரிகளுடன் பேசி உறுதி செய்துள்ளார்.

ஆப்கானில் அண்மைய மாதங்களில் பலரையும் இலக்கு வைத்து படுகொலைத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

செப்டெம்பர் 11 தாக்குதலுக்கு பின்னர் ஆப்கானுக்கு படையெடுத்து தலிபான்களை பதவி கவிழ்த்தது தொடக்கம் 2001 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் நிலைகொண்டுள்ளன.

எனினும் ஆப்கானில் தொடர்ந்து பெரும் சக்தியாக இருக்கும் தலிபான்கள் நாட்டின் மூன்றில் இரண்டு பகுதியில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருவதோடு அது அந்நாட்டு அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...