கொவிட்-19 தடுப்பு மருந்தின் முதல் தொகுதி நாளை மறுதினம் இலங்கை வந்தடைகின்றது | தினகரன்

கொவிட்-19 தடுப்பு மருந்தின் முதல் தொகுதி நாளை மறுதினம் இலங்கை வந்தடைகின்றது

-  யட்டபாத்த 'கிராமத்துடன் உரையாடலில்' ஜனாதிபதி தெரிவிப்பு

இந்திய அரசு இலவசமாக வழங்கும் கொவிட் தடுப்பு மருந்தின் முதலாவது தொகுதி எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை நாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். சுகாதார மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை மறுநாள் (28) ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 

 இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவுடன் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டுள்ளதன்படி தேவையான அளவு தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதை விரைவுபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார். 

நேற்றுமுன்தினம் 23ஆம் திகதி முற்பகல் களுத்துறை, வலல்லாவிடவில் உள்ள யட்டபாத்த கிராமத்தில் நடைபெற்ற 7வது 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியில் பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிய முன்னர் அங்கு வருகை தந்திருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது சமூகத்தில் விவாதிக்கப்பட்டு வரும் பல பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார். 

கொழும்பு துறைமுகம் மற்றும் கிழக்கு முனையம் குறித்து இடம்பெற்று வரும் உரையாடல்கள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, முன்னைய அரசாங்கம் கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினார். 

இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தை தன்னிச்சையாக நிறுத்த முடியாது. முந்திய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட எம்.சி.சி ஒப்பந்தம் தொடர்பான தனது அரசாங்கத்தின் கொள்கை அமெரிக்க அரசாங்கத்திற்கு விளக்கிக் கூறப்பட்டுள்ளது. உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் போது நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் எந்தவொரு வளமும் வேறு நாட்டிற்கு வழங்கப்படாது என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். 

 ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் தனது முதல் இந்தியப் பயணத்தின் போது, பிரதமர் மோடியுடன் விரிவாக கலந்துரையாடி கிழக்கு முனைய ஒப்பந்தம் குறித்து விளக்கமளித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விளக்கியதாக ஜனாதிபதி தெரிவித்தார். கிழக்கு முனையம் என்றால் என்ன, அதன் பங்கு என்ன என்பதை விளக்கிய ஜனாதிபதி, கிழக்கு முனையத்தின் முக்கிய வருமான ஆதாரம் மீள் ஏற்றுமதி செயல்முறை என்று சுட்டிக்காட்டினார். 

 மீள் ஏற்றுமதியில் இந்தியா 66%பங்களிப்பு செய்கிறது. எனவே, கிழக்கு முனைய வளர்ச்சியின் மூலம் அடைய எதிர்பார்க்கப்படும் வர்த்தகப் பங்கைப் புரிந்து கொண்டு அடுத்த கட்டங்களைத் திட்டமிடுவது அவசியம். முதலீட்டு திட்டத்தின் கீழ், முனையத்தின் நிர்வாகமும் 51%பங்குகளும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமானதாக இருக்கும். இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் மீதமுள்ள 49%ஐ முதலீடு செய்ய முன்வந்துள்ளன. 

 அரச சேவையில் திறமையின்மையை நீக்குவது மக்களின் முக்கிய கோரிக்கையாகும். சுங்கத்துறையின் வினைத்திறனின்மை மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் வெற்றிக்கு தடையாக இருக்கும் அனைத்து அதிகாரிகளையும் அகற்றியேனும் திறமையின்மை மற்றும் ஊழல் நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி கூறினார். 

 அனைத்து அரச நிறுவனங்களிலும் நல்ல அதிகாரிகள் உள்ளனர். ஊழலிலிருந்து விடுபட்ட திறமையான அரச சேவையொன்றை ஏற்படுத்துமாறு அவர்களும் தன்னிடம் கோருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரச ஊழியர்கள் பொதுப் மக்கள் பணத்தின் மூலமே பராமரிக்கப்படுவதை நினைவுபடுத்தினார். தான் ஏற்றுக் கொண்ட பணியை சிறப்பாக செய்ததன் காரணமாகவே மக்கள் 150ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்ற பலத்தை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார். 

 'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சியின் ஏழாவது நிகழ்ச்சியில் பங்கேற்க யட்டபாத்த உபசேன மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அங்கு வருகை தந்திருந்த மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். உபசேன மைதானத்தை அபிவிருத்தி செய்து தருமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மறுநாளே செயல்படுத்த ஜனாதிபதி ஒப்புக் கொண்டார். 

மக்கள் முன்வைத்த காணிப் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர், முறையான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்ட காணிகளுக்கான காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதை விரைவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். 

“எந்த விதமான சொத்துக்களும் இல்லாத மக்கள் நீண்ட காலம் ஒரு காணியில் குடியிருக்கவோ அல்லது பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களை கவனமாக ஆராய்ந்து காணி உரிமை வழங்கப்பட வேண்டும். காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளுக்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவது அடுத்த ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்”என்று ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

நெஹிரிஹேன – யட்டபாத்த வீதியில் வேவெல்ல நெஹிரிஹேன வீதியின் 4.2கி.மீ பகுதியை காப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணியும் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது. 

'கிராமத்துடன் உரையாடல்' திட்டம் 2020செப்டம்பர் 25அன்று பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களை உள்ளடக்கி கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை சரியான கவனம் செலுத்தப்படாத நகரத்திற்கு வெளியே உள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த மக்களை சந்தித்து,

அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து, அச்சந்தர்ப்பத்திலேயே அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வுகளை வழங்குவதே ஜனாதிபதியின் நோக்கமாகும்.

தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சினைகள் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படும். 

கிராம மக்களிடம் சென்று, அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து, அவர்களின் முன்மொழிவுகளில் இருந்து தீர்வுகளைக் காண்பதும் இந்த திட்டத்தின் நோக்கம். அவ்வாறு செய்ய ஒவ்வொரு சனிக்கிழமையும் தான் ஒரு பின்தங்கிய கிராமத்திற்கு செல்வதாகவும் ஜனாதிபதி கூறினார். 

 களுத்துறை நகரத்திலிருந்து சுமார் 64கி.மீ தூரத்தில் வலல்லாவிட பிரதேச செயலக பகுதியில் உள்ள யட்டபாத்த கிராமம் மேல் மாகாணத்தின் ஒரு முனையில் தென் மாகாணத்தின் நெலுவ கிராமத்தின் எல்லையில் உள்ள அமைந்துள்ளது.

மண்டகல, குலனவத்த, வீரகந்த, ரனேபுரகொட ஆகிய கிராமங்கள் யட்டபாத்த கிராம எல்லையில் உள்ள ஏனைய கிராம சேவகர் பிரிவுகளாகும். 1530குடும்பங்களை கொண்ட இந்த 05கிராம சேவகர் பிரிவுகளின் மக்கள் தொகை 5748ஆகும்.

நெல், தேயிலை, இறப்பர், கறுவா செய்கை மற்றும் கிதுல் உற்பத்தித் தொழில் ஆகியவை அவர்களின் முக்கிய வாழ்வாதாரமாகும்.  'கிராமத்துடன் உரையாடல்' நிகழ்ச்சித் திட்ட ஆரம்பத்தில் அனுசாசன உரை நிகழ்த்திய வலல்லாவிட்ட, கடுதொர ஸ்ரீ விமலராமாதிபதி பஸ்துன் கோரளை தலமை சங்க நாயக்க தேரர் சங்கைக்குரிய கொவிடியாகல ஜினசிறி தேரர், "மக்கள் ஜனாதிபதி மீது வைத்த எதிர்பார்ப்புகள் குறித்து இன்னும் நம்பிக்கையுடன் உள்ளனர்“ எனக் குறிப்பிட்டார்.  

யட்டபாத்த ஆரம்பப் பாடசாலைக்கு ஸ்ரீலங்கா டெலிகொம், மொபிடெல் நிறுவனம் நன்கொடை அளித்த ஸ்மார்ட் வகுப்பறை, கணினி மற்றும் டயலொக் நிறுவனம் அன்பளிப்பு செய்த நீண்ட கால இணைப்பை கொண்ட தொலைக்காட்சி ஆகியவற்றை ஜனாதிபதி அதிபரிடம் வழங்கினார். 

யட்டபாத்த கல்லூரிக்கான கட்டடம் ஒன்றை அமைக்கும் பொறுப்பை மேல் மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக்க ஏற்றுக் கொண்டார்.

கல்லூரி விளையாட்டு மைதானம் உட்பட மத்துகம வலயத்தைச் சேர்ந்த 52பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். வலயத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யவும், உட்கட்டமைப்பு தேவைகளை பூர்த்தி செய்யவும் அவர் உத்தரவிட்டார். 

பெலவத்த - பதுரலிய, நெலுவ - பதுரலிய வீதிகள் மற்றும் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யவும் முடிவு செய்யப்பட்டது. திட்ட மேற்பார்வை அப்பகுதியில் உள்ள மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அபிவிருத்திப் பணிகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ளாத ஒப்பந்தக்காரர்களை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தினார். 

பிரதேசத்தின் சுகாதாரம், குடிநீர் வழங்கல், குளங்கள், கால்வாய்கள் மற்றும் அணைகள் அமைத்தல் உள்ளிட்ட மக்களின் தேவைகளை விரைவாக பூர்த்தி செய்யும் பணி சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களின் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.   


Add new comment

Or log in with...