ரஞ்சன் சிறைக்குச் சென்றமை அரசியல் பழிவாங்கல் அல்ல! | தினகரன்

ரஞ்சன் சிறைக்குச் சென்றமை அரசியல் பழிவாங்கல் அல்ல!

'பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைக்கு அனுப்பப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கூறுமேயானால், ரஞ்சன் ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி அரசாங்க காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அக்கட்சியினர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்' என்று அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில கூறினார். அமைச்சர் உதய கம்மன்பில எமக்கு பேட்டியொன்றை வழங்கினார்.

கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா கருத்து வெளியிட்டதுடன், ஹரீன் பெர்னாண்டோவுக்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு சபாநாயகரிடமும் பொலிஸ் மாஅதிபரிடமும் கேட்டிருக்கிறாரே? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: -செய்வதற்க எதுவும் இல்லாததால் எதிர்க் கட்சியினர் இந்த விடயத்தை வேண்டுமென்றே மிகைப்படுத்துகின்றனர். எதிர்க் கட்சியினர் கூறுவதைப் போல் ஜனாதிபதி அவரது பேச்சில் ஹரின் பெர்னாண்டோவை அச்சுறுத்தவில்லை. செய்வதற்கு வேறு எதுவும் இல்லாததால் அடிப்படையற்ற இந்த விடயத்தை வைத்து இல்லாத விடயங்களை உருவாக்க எதிர்க் கட்சியினர் முயற்சிக்கின்றனர்.

கே: ரஞ்சன் ராமநாயக்கவின் 4 வருட கடூழிய சிறைத் தண்டனையை ஒரு அரசியல் பழிவாங்கல் முயற்சியாகக் காட்ட எதிர்க் கட்சியினர் முனைகின்றனர். இது பற்றிய உஙகள் கருத்து என்ன?

பதில்: - ரஞ்சன் ராமநாயக்க விவகாரம் ஒரு அரசியல் பழி வாங்கல் என்று ஐக்கிய மக்கள் சக்தி கூறுமாக இருந்தால், ராமநாயக்க மீதான முறைப்பாடு நல்லாட்சி காலத்திலேயே செய்யப்பட்டது என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விசாரித்த நீதிபதிகள் அப்போதைய அரசியலமைப்பு சபையின் சிபாரிசின் பேரில்அவர்களது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டவர்கள். எனவே இந்த நீதிமன்ற தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தால் அதற்கான பொறுப்பை எதிர்க் கட்சியினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த தீர்ப்பின் பின்னால் எந்தவொரு அரசியல் நோக்கமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்ந்தும் நீதித்துறையை அவமதித்து வந்தார். நாட்டின் நீதித்துறை மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இல்லாமல் செய்வதற்கு அவர் வேண்டுமென்றே முயற்சித்தார். எனவே இவ்வாறான தீர்ப்பு அவருக்கு ஏற்றதாகும்.

கே: -இலங்கைக்கு கொவிட்19 தடுப்பு மருந்துகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய மற்றும் சீன பிரதமர்களுக்கு கடிதமெழுதியுள்ளார். இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்தைக் கொண்டு வருவது தொடர்பான தற்போதைய நிலை என்ன?

பதில்: -எமது மக்களின் உயிர்களை பணயம் வைக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால் உலக சுகாதார அமைப்பு கொவிட் 19 தடுப்பு மருந்தை அங்கீகரிக்கும் வரை அரசாங்கம் இப்போது பொறுமை காத்து வருகிறது. மேற்படி நட்பு நாடுகள் இரண்டுக்கும் கடிதம் எழுதியுள்ள எங்கள் ஜனாதிபதி, இலங்கைக்கு விரைவில் தடுப்பு மருந்தைக் கொண்டு வருவதை விரைவுபடுத்த தனது பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க தலைமையில் குழுவொன்றையும் அமைத்துள்ளார்.

ஏதிர்வரும் பெப்ரவரி மாத இறுதியில் இலங்கைக்கு கொவிட் 19 தடுப்பு மருந்து கிடைக்கும் என நம்பலாம்.

கே: பலம் மிக்க எதிர்க் கட்சி இல்லாமை ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதாக இல்லை என்று சிலர் கூறுகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: -பலம் மிக்க எதிர்க் கட்சியானது பொறுப்புள்ள எதிர்க் கட்சியாகவும் இருக்க வேண்டும். பலம் மிக்க எதிர்க் கட்சி பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அது அது பயங்கரவாதத்தை விட ஆபத்தானது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் 54 உறுப்பினர்கள் உள்ளனர். 1977 இல் எதிர்க் கட்சியில் 8 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே இது ஒன்றும் புது விடயமல்ல. எவ்வாறெனினும் அரசாங்கம் தவறான வழியில் சென்றால் அதனைச் சுட்டிக் காட்ட பலம் மிக்க எதிர்க் கட்சி எமக்குத் தேவைப்படுகின்றது.

கே: கொவிட் 19 நடவடிக்கைகளை கையாள்வதற்கு இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளமையானது நாடு இராணுவ மயப்படுத்தலை நோக்கிச் செல்வதைக் காட்டுவதாக ஐக்கிய மக்கள் கட்சி கூறுகிறது. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: -இது ஒரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. ஏனெனில் சுகாதார அதிகாரிகளையோ நிர்வாக அதிகாரிகளையோ இராணுவம் மாற்றவில்லை. நாடளாவிய ரீதியில் இராணுவ முகாம்கள் உள்ளன. தனிமைப்படுத்தல் அல்லது நிவாரண பங்கீடு ஆகிய விடயங்கள் தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் உள்ளூர் தலைவர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

இதனால்தான் இராணுவத் தளபதி 25 மேஜர் ஜெனரல்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்துள்ளார்.

எனவே மாவட்ட செயலாளர்கள் இராணுவத் தளபதியை தொடர்பு கொள்ளாமல் நேரடியாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொள்ள முடியும்.

எதிர்க்கட்சியினர் கூறுவது போல் எந்தவொரு இராணுவ மயப்படுத்தலும் இல்லை. மாவட்ட மட்டத்தில் 25 தொடர்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுகாதார மற்றும் நிர்வாக அதிகாரிகள் தேவைப்படும் போது மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களான மேஜர் ஜெனரல்களை தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.

கே: மேல் மாகாண சபை முன்னாள் அமைச்சர் என்ற வகையில் மாகாண சபை முறைமையை தொடர்வது நியாயபூர்வமானதா? அது பொதுமக்கள் பணத்தை விரயமாக்கும் ஒரு செயல் என்று சிலர் கூறுகிறார்களே?

பதில்: -கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டுள்ளன. மாகாண சபை முறைமை தேவையற்றது என்று முன்னைய நல்லாட்சி அரசு கருதியது. அதனால்தான் மாகாண சபைத் தேர்தல்களை அவர்கள் இரண்டரை வருடங்களுக்கு மேல் பின்போட்டார்கள். நாம் இப்போது புதிய அரசியலமைப்பொன்றை தயாரித்து வருகிறோம். அது தொடர்பாக மக்கள் அபிப்பிராயம் கோரப்படும். மாகாண சபைகள் தேவையா அல்லது வேறு முறை தேவையா என்பதை மக்கள் அப்போது தீர்மானிக்கலாம்.

கே: அரசாங்கம் தற்போது தவறான பாதையில் போய்க் கொண்டிருப்பதாக மகாசங்கத்தின் ஒரு பகுதியினர் பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இந்தக் குற்றச்சாட்டில் ஏதேனும் உண்மை உள்ளதா?

பதில்: - தற்போதைய நிர்வாகத்தை அமைப்பதில் மகாசங்கத்தினரும் முக்கிய பங்கு வகித்தனர். எனவே அரசாங்கத்துக்கு எதிராக அவ்வாறான குற்றச்சாட்டை சுமத்த மகாசங்கத்தினருக்கு அனைத்து உரிமையும் உள்ளது. அதேவேளை அவர்கள் சொல்வதைக் கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளும் பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. மகாசங்கத்தினர் அவர்களது பாரம்பரிய பங்களிப்பையே நிறைவேற்றுகின்றனர். அது அவர்களது உரிமை. எனவே நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

கே: நாட்டில் நாளாந்தம் கொவிட் 19 தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருவதற்கு கதவுகளை திறந்து விடுவது சரியென்று நினைக்கிறீர்களா?

பதில்: -நாங்கள் சுமார் ஒரு வருட காலமாக சுற்றுலாத் துறையினருக்கு கதவை அடைத்து வைத்திருந்தோம். மிகவும் தேவையான வெளிநாட்டு செலாவணியை சம்பாதிப்பதற்கு சுற்றுலாத்துறை முக்கியமாகும். அதனால்தான் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலில் பயணக் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய முறையைப் பயப்படுத்தி சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் பயணம் செய்ய வழி செய்திருக்கிறோம். நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு கொவிட் 19 தொற்றாளர்கள் இருப்பது உண்மைதான். அந்த நிலையிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர விரும்பினால் நாம் ஏன் அதற்கு எதிராக இருக்க வேண்டும்?

கே: வடபகுதி மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதன் பிரிவினைவாத எண்ணங்களில் இருந்து மாறி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: வடபகுதி மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிச் சென்றிருந்ததை காண முடிந்தது. அவர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஸ்ரீ லங்கா பொது பெரமுன, ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி ஆகிய அரசாங்க கூட்டணி பங்காளிக் கட்சிகளுக்கே ஆதரவு வழங்கியிருந்தனர். எனவே வடக்கு மற்றும் கிழக்கு வாக்காளர்கள் விடுத்துள்ள செய்தியை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தச் செய்தி என்னவென்றால் அவர்களுக்கு பகிர்வை விட அபிவிருத்தியே தேவைப்படுகிறது. அவர்களது இந்தச் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடன் கைகோர்த்து அவர்களின் பிரதேசத்தை அபிவிருத்தி செய்து கொடுக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றத்துக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் உட்பூசல்களே காரணம். கட்சி உட்பூசல் காரணமாக மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் அவர்கள் போதிய அக்கறை காட்டவில்லை. இதன் காரணமாக கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களின் பெறுபேறுகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் குறைந்திருந்தன.

உதித்த குமாரசிங்க
தமிழில்: என். ராமலிங்கம்


Add new comment

Or log in with...