- காட்டு யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு கேட்டு போராட்டம்
- போராட்டத்தை கைவிடுமாறு அமைச்சர் வேண்டுகோள்
காட்டு யானைகளால் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வரும் அம்பாந்தோட்டை, சூரியவெவ, வல்சபுகல காட்டு எல்லைப்புற மக்கள் நிரந்தர தீர்வு வழங்குமாறு கோரி 3 ஆவது நாளாக சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பங்கெடுத்திருந்த விவசாயிகள் இருவர் சுகவீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வளவ வலது கரை விவசாய காணி கமத்தொழில் அமைப்பு உட்பட 86 விவசாய அமைப்புக்கள் மேற்படி சத்தியாக்கிரக போராட்டத்தை கடந்த 18ஆம் ஆரம்பித்திருந்த நிலையில், இப்போராட்டம் கடந்த புதன்கிழமை (20) சாகும் வரை உண்ணாவிரத போராட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
காட்டு யானைகள் தற்போது இப்பிரதேசத்தில் ஊடுருவி தமது நிம்மதியான வாழ்க்கையைக் கெடுத்து வருவதடன் பகல் வேளைகளிலும் விவசாய நிலப் பிரதேசத்தை ஆக்கிரமித்து பயிர்களை நாசம் செய்வதுடன் இரவு வேளைகளில் உயிர்ப் பாதுகாப்புக்காக இப்பிரதேச மக்கள் மரங்களில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் அல்லது பாதுகாப்பான தூர இடங்களை நாடிச் செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.
எனவே காலம் தாழ்த்தாது காட்டு யானை பாதுகாப்பு முகாமைத்துவ திட்டத்தினை துரிதமாக நடைமுறைப்படுத்தி இப்பிரதேசத்தில் யானை மனித சமரில் இறப்பை தடுத்து, மக்களின் உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதேவேளை வனசீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலி மற்றும் அகழிகளை நிர்மாணித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இப்போராட்டத்தைக் கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர் - பாயிஸ்)
Add new comment