ஒட்டுசுட்டானுக்கு தனிப் பிரதேச சபை அமைய வேண்டும்

- புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சதாசிவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு பரப்பளவைக் கொண்ட ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தனிப் பிரதேச சபை அமைய வேண்டும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் உறுப்பினர் சதாசிவம் சத்தியசுதர்சன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 6,706குடும்பங்களைச் சேர்ந்த 20,784குடும்ப உறுப்பினர்கள் வாழ்கின்றனர். ஆனால் தனிப் பிரதேச சபை இல்லை. புதுக்குடியிருப்பு பிரதேச சபையாலேயே ஒட்டுசுட்டான் பிரதேசம் நிர்வகிக்கப்படுகின்றது.

தனிப் பிரதேச சபை உருவானால் பிரதேச அபிவிருத்தியில் சுயமாக முடிவெடுக்க முடியும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்க முடியும். மக்கள் இலகுவாக பிரதேச சபையை அணுக முடியும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிக பரப்பளவைக் கொண்ட (618கிலோமீற்றர்) பிரதேச செயலகமாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் காணப்படுகின்றது. இப் பிரதேச செயலகப் பிரிவில் ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய இரு  பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. தனிப் பிரதேச சபை உருவானால் அரச நிதி ஒதுக்கீட்டினை தனியாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

மக்களுக்கு இலகுவாக திருப்தியான சேவையை வழங்க முடியும்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவை விட குறைவான மக்கள் தொகையினைக் கொண்ட மாந்தை கிழக்கு, துணுக்காய் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் தனித் தனிப் பிரதேச சபைகள் இயங்குகின்ற போது ஒட்டுசுட்டானில் மட்டும் தனிப் பிரதேச சபை உருவாக்கப்படவில்லை.

இது தொடர்பாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, ஒட்டுசுட்டான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வருகின்ற போதிலும் ஒட்டுசுட்டானுக்கான தனிப் பிரதேச சபை அமைக்கப்படவில்லை எனவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை சதாசிவம் சத்தியசுதர்சன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...