ஜப்பானில் 130 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து | தினகரன்

ஜப்பானில் 130 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து

ஜப்பானின் மியாகி பகுதியில் வீசும் கடுமையான பனிப்புயலால் நெடுஞ்சாலை ஒன்றில் அடுத்தடுத்து 130 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் ஒருவர் உயிரிழந்ததோடு 10 பேர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 200 பேர் விபத்தில் சிக்கினர். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

அண்மைய வாரங்களாக, ஜப்பானில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் வழக்கமான சராசரியைப் போல் இருமடங்கு பனி காணப்படுகிறது. இந்நிலையில் உள்ளூர் நேரப்படி கடந்த செவ்வாய்க்கிழமை நண்பகல் வீசிய இந்த அதிதீவிர பனிப்புயல் மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகு நெடுஞ்சாலையை போர்வையை கொண்டு மூடியதுபோல் மாற்றியது.

இதில் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த 130க்கும் மேற்பட்ட கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு ஒரே குவியலாக காட்சியளித்தன. மேலும், வாகனங்களை அங்கிருந்து உடனடியாக அப்புறப்படுத்த முடியாததால் அவை பனியால் மூடப்பட்டன.

பனிப்புயல் குறித்த அச்சம் காரணமாக இந்த நெடுஞ்சாலையில் ஏற்கனவே மணிக்கு 50 கிலோ மீற்றர் வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கட்டுப்பாடு விதித்திருந்த நிலையலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


Add new comment

Or log in with...