வாழைச்சேனை காகிதஆலை அருகே வயல்களுக்குள் பிரவேசித்த யானைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை அறுவடைக்குத் தயாராகவுள்ள நிலையில் வெள்ளம், நோய்த் தாக்கம் மற்றும் யானைகளில் அட்டகாசத்தினால் விவசாயிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலைமை காணப்படுகின்றது.

இந்நிலையில் வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாயக் கண்டத்திற்குள் பிரவேசித்த யானைகள் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சத்தவெடி வைத்து காட்டுப் பகுதிக்கு துரத்தப்பட்டன. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை பட்டப்பகலில் இடம்பெற்றது.

வாழைச்சேனை காகித ஆலையை அண்மித்ததாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. வாழைச்சேனை காகித ஆலையின் கட்டிடத்தில் ஏறி நின்று பார்த்தால் யானைகளின் அட்டகாசத்தை காண முடிவதாக அங்குள்ளோர் தெரிவித்தனர்.

யானைகளைத் துரத்துவதற்கு கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து விவசாயிகளும் முற்பட்ட போது, யானை மீண்டும் அவர்களை துரத்தியது. இருந்தும் கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகளின் பலத்த முயற்சியின் காரணமாக யானைகள் மீண்டும் காட்டு பகுதிக்குள் துரத்தப்பட்டன.

குறித்த யானையொன்று நோய்வாய்ப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும், இது தொடர்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட பிராந்திய காரியாலத்திற்கு தெரியப்படுத்தியதாகவும், வைத்திய அதிகாரி வருகை தரும் பட்சத்தில் யானைக்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வைத்தியத்தை ஆரம்பிக்க முடியும் என்றும் கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இருந்து வருகை தந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

ைவாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் வருகையை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன், இரவு நேரங்களில் வயல் காவல் செய்வதில் தங்களுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர். வயல் பகுதிக்கு பிரவேசித்த யானை வயல் நிலங்களை அழித்து விவசாயிகளால் செய்கை செய்யப்பட்ட சோளம் மற்றும் கச்சான் என்பவற்றை அழித்து நாசம் செய்துள்ளதுடன், வயல் காவலாளியின் குடிசையையும் துவம்சம் செய்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளுக்கு யானைகள் தொடர்ச்சியாக வருகை தருவது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் விடுத்த பட்சத்தில் கிரான் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வருகை தந்து சத்தவெடி மூலம் யானையை காட்டுப் பகுதிக்கு விரட்டுகின்றனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சென்றதும் சிறிது நேரம் கழித்து மீண்டும் யானைகள் வயல் பகுதிக்கு வருகை தருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

யானைத் தொல்லையில் இருந்து விவசாயத்தினை பாதுகாப்பதா அல்லது வெள்ளம் மற்றும் நோய் என்பவற்றில் இருந்து விவசாயத்தினை காப்பாற்றுவதா அல்லது எங்களின் உயிரை காப்பாற்றுவதா என்ற கவலையில் எங்களது ஒவ்வொரு நாளையும் கழிப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் பரம்பரை பரம்பரையாக விவசாயச் செய்கையினை மேற்கொண்டு வருவதுடன், எங்களது ஜீனனோபாய தொழிலாகவும் விவசாயத்தினையையே நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் எங்களுக்கு இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வெள்ளம், நோய்த்தாக்கம் மற்றும் யானைகள் பிரச்சினைகள் ஒரு போகம் இரண்டு போகத்துக்கு மாத்திரம் இடம்பெறுவதில்லை. இவை தொடர்ச்சியாகவே ஒவ்வொரு போகமும் இடம்பெற்று வருகின்றன. இதனால் ஒவ்வொரு போகமும் விவசாயத்தினை நம்பி வாழும் நாம் பாதிக்கப்பட்டு வருவதே தொடர் வழமையாக காணப்படுகின்றது என விசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பிரச்சினைகள் தொடர்ச்சியாக வரும் நிலையில் வங்கிகளின் கடன் மற்றும் நகைகளை அடகு வைத்து விவசாயச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தொடர்ச்சியாக கடன் சுமையுடன் கடன்காரனாக வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆகவே இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கையை மேற்கொண்டு யானைகளின் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்
(கல்குடா தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...