பாடசாலை வளாகத்துக்குள் சுவரேறிக் குதித்து பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்! | தினகரன்

பாடசாலை வளாகத்துக்குள் சுவரேறிக் குதித்து பிள்ளைகளை அழைத்துச் சென்ற பெற்றோர்!

- எங்கும் பரவிய பி.சீ.ஆர் வதந்தி!

கொரோனா நாம் வாழும் இந்த உலகை உலுக்கி பல வகையானதாக்கங்களைச் செலுத்திவருகின்றது. பல விதமானஎதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையில் கொரோனாவின் தாக்கம் ஒரு வருட காலத்தை அண்மித்துள்ள இவ்வேளையில், கடந்த செவ்வாய்க்கிழமை புதுவகையான சிக்கலொன்று அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. 

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையிள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கு கொரோனா பி.சி.ஆர் சோதனை இடம்பெறுவதாக வதந்தி பரவியதையடுத்து அங்கு பதற்றம் நிலவியதோடு பாடசாலைகளும் நேரகாலத்தோடு இழுத்து மூடப்பட்டன. 

பாடசாலைகளில் மாணவர்களுக்கு பீ.சி.ஆர் எடுக்கப்படுவதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று தத்தமது வீடுகளுக்கு அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதனைக் கேள்வியுற்ற பெற்றோர் தமது பிள்ளைகளை வீட்டுகளுக்கு அழைத்துச் செல்ல முனைந்த போதே பாடசாலைகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. 

சம்மாந்துறையில் பரப்பப்பட்ட பீ.சீ.ஆர் வதந்தியால் பாடசாலைகளில் பதற்றம் நிலவியது. இதனையடுத்து சம்மாந்துறையிலுள்ள பாடசாலைகளுக்குள் நுழைந்து தங்கள் பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தால் சம்மாந்துறை பிரதேசப் பாடசாலைகளில் கடந்த செவ்வாயன்று அல்லோலகல்லோல நிலைமை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது. 

சில பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நிலையில், தொடராகப் பாடசாலைகளை நோக்கிப் படையெடுத்த பெற்றோர் பாடசாலைகளின் நுழைவாயிலை முற்றுகையிட்டதுடன் தங்கள் பிள்ளைகளை ஒப்படைக்குமாறு நிருவாகத்தினரிடம் மன்றாட்டத்தில் ஈடுபட்டனர்.சிலர் அதிபர் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 

இது குறித்து சுகாதாரத் துறையினருடன் தொடர்பு கொண்ட போது, மாணவர்களைப் பீ.சீ.ஆர் எடுத்த சம்பவம் எதுவும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் நடைபெறவில்லையென்று தெரியவந்தது. 

மாணவர்களுக்கு பீ.சீ.ஆர். எடுத்த நிகழ்வுகள் எதுவும் இடம்பெறவில்லை எனவும் இது வதந்தியென்றும் பாடசாலைகளுக்கு சென்ற பொலிசார் தெரிவித்தனர். மொத்தத்தில் இரண்டு மணிநேர அல்லோலகல்லோலத்தின் பின்னர் பாடசாலைகள் மூடப்பட்டன. ஆசிரியர்களும் அதிபர்களும் வெளியேறினர். வீணான வதந்தியால் மாணவர்களின் கல்வி வீணடிக்கப்பட்டதாக பலரும் தெரவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.சபூர்த்தம்பியிடம் கேட்ட போது அவர் இவ்வாறு சொன்னார். 

"எங்களது கோட்டத்தில் 37பாடசாலைகள் உள்ளன. அவற்றில் 9தமிழ்ப் பாடசாகைள், மீதி 28முஸ்லிம் பாடசாலைகள்.அங்கு 16,000மாணவர்கள் 1,500ஆசிரியர்கள் உள்ளனர். 

சம்பவதினம் காலை 10.30மணியளவில் பரப்பட்ட பி.சி.ஆர் வதந்தியால் பெற்றோர் பாடசாலைகளை முற்றுகையிட்டு பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். சிலர் மதிலுக்கு மேலால் ஏறி உட்சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தம் பிள்ளைகளை கூட்டிச் சென்றனர். 

இதனால் முஸ்லிம் பாடசாலைகள் 12மணியளவில் இழுத்து மூடப்பட்டன. அனைவரும் வெளியேறினார்கள். 

ஒருவாறாக நீண்ட நாளைக்குப் பிறகு இவ்வாரம்தான் பாடசாலைகள் வமைக்குத் திரும்பின. அதற்குள் இப்படியொரு துர்பாக்கிய நிலைமை.இனி இந்த நிலைமையிலிருந்து விடுபட எத்தனை நாட்களாகுமோ தெரியாது. நான் ஊரிலுள்ள பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையிடம் கதைத்துள்ளேன்.எமது பணிப்பாளரிடமும் கூறியுள்ளேன்."  

இவ்வாறு அவர் கூறினார். 

இவ்வாறான பொய்யான வதந்தியை ஆராயமல் பெற்றோர் நடந்து கொண்ட விதம் பற்றி பலரும் விமர்சனம் செய்கின்ற அதேவேளை, பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் துரிதமாக இயங்கி மறுநாள் பாடசாலைகளை இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். 

அதன் பிரதிபலிப்பாக சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ​ெடாக்டர்.எஸ்.ஜ.எம்.கபீர் அன்று பிற்பகலில் பெற்றோர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்றை நம்பிக்கையாளர் சம்மேளனத்தலைவர யு.எல்.மஹ்றூப் மதனியின் அனுமதியுடன் பொதுமக்களுக்கு விடுத்திருந்தார். 

அதாவது எமது பிரிவிற்குள் வேண்டுமென்றே விஷமிகளால் பொய்யான வதந்தியொன்று பி.சி.ஆர் சோதனை தொடர்பாக பரப்பப்பட்டுள்ளது.இது திட்டமிட்ட சதி. இது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும். 

சம்மாந்துறை சுகாதாரப் பிரிவிற்குள் எமது அனுமதியின்றி யாரும் பி.சி.ஆர் அல்லது அன்ரிஜன் சோதனையை மேற்கொள்ள முடியாது. எனவே எதுவித அச்சமுமின்றி பெற்றார் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு வேண்டுகின்றேன் என்பதாகும். 

இவ்வறிவித்தல் பொது இடங்களில் ஒட்டப்பட்டதுடன் பள்ளிவாசல்களிலும் ஒலிபரப்பப்பட்டன. 

இதனையடுத்து நேற்று(20) புதன்கிழமை அனைத்து பாடசாலைகளும் திறக்கப்பட்டன. பெரும்பாலான மாணவர்கள் சமுமளித்திருந்தனர். 

நிலைமை இவ்வாறிருக்க, பி.சி.ஆர் அல்லது அன்ரிஜன் என்றால் பெற்றோர் ஏன் இவ்வாறு பதற்றப்பட வேண்டும் என்ற கேள்வி இங்கு எழுகின்றது. பி.சி.ஆர் என்றால் வேண்டத்தகாத ஒன்று என்ற அபிப்பிராயம் சமுகத்தின் மத்தியில் ஊடுருவியுள்ளதா? அல்லது பி.சி.ஆர் என்றால் என்ன என்ற விழிப்புணர்வு இல்லையா? என்ற வினாவும் கூடவே எழுகிறது. 

உண்மையில் பாடசாலைகளில் மாணவர்களுக்கு இத்தகைய பரிசோதனைகள் நடைபெறுகின்றதென்றால் முதலில் சுகாதாரத்துறை அதுபற்றி அறிவிக்கும். எனவே பெற்றோர் உண்மையில் பி.சி.ஆர் சோதனைகள் இடம்பெறுகின்றதா? என்பது பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும். அதாவது அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். 

மறுபக்கம் இத்தகைய பி.சி.ஆர் சோதனை செய்வதால் எமக்கு என்ன நன்மை தீமை என்பது பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும். அவற்றையெல்லாம் விடுத்து அவசரஅவசரமாக அவ்வதந்தியை நம்பி பதற்றப்பட்டதை ஏற்க முடியாது. 

எங்களையும் சமூகத்தையும் காப்பாற்றவே இவை செய்யப்படுகின்றன என்ற விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும் என்றதேவை இங்கு எழுகிறது. எனவே பி.சி.ஆர் பற்றியகுறிப்பைப் பார்ப்போம்.

பி. சி. ஆர் என்றால் என்ன? 

இன்று உலகெங்கிலும் இனமதபிரதேச பேதமற்று அதிகமாக உச்சரிக்கப்படும் சொல் கொரோனா என்றால் அது மிகைப்பட்ட கூற்றல்ல. கொரோனா என்று உச்சரிக்கப்படும் சந்தர்ப்பங்களிலெல்லாம் கூடவே இன்னுமொரு சொல் உச்சரிக்கப்படும். அதுதான் பி.சி.ஆர்.  

இந்த பி.சி.ஆர் என்றால் என்ன? அதன் விரிவாக்கம் என்ன? இதனை எப்படி மேற்கொள்வது போன்ற விளக்கம் பலருக்குத் தெரியாது என்பது புதிய விடயமல்ல. 

எனவே அதுபற்றி இங்கு பார்ப்போம். 

PCR எனப்படுவது Polymerase chain reaction என பொருள்படுகின்றது. 

ஒவ்வொரு உயிரினத்தின் செல்களிலும் DNA, RNA(நியூக்ளிக் அமிலங்கள்) என இரண்டில் ஒன்று அல்லது இரண்டும் என ஏதாவது ஒன்றோ கண்டிப்பாக இருக்கும். 

அதுதான் அந்த உயிரினம் எப்படி வளர வேண்டும் எப்படி செயல்பட வேண்டும் என்பதனை தீர்மானிக்கிறது. ஒவ்வொரு உயிரினத்திற்கும் இது மாறுபடலாம். பெரும்பாலான உயிரினங்களில் DNA இருக்கும். அதேநேரம் சில வைரஸ் போன்ற கீழ்நிலை உயிரினங்களில் RNA மாத்திரமே இருக்கும். 

இந்த RNA ஐ வைத்து கிருமியைக் கண்டுபிடிப்பதுதான் PCR Test என அழைக்கப்படுகின்றது. முன்னர் காச நோய் உட்பட பல நோய்க் கிருமிகளைக் கண்டறிய இம்முறை கையாளப்பட்டு வந்துள்ளது. 

வைரஸின் RNA ஐ DNA ஆக மாற்றி அதன் மூலம் அது எந்த வகையான வைரஸ் என கண்டறிவதே RT-PCR எனப்படுகின்றது. கொவிட் - 19வைரஸ் ஒரு RNA வைரஸ் வகையை சார்ந்தது. 

அது கிருமிதானா என கண்டறிந்து உறுதி செய்யவே RT-PCR பரிசோதனை பயன்படுகிறது. 

தொண்டை அல்லது மூக்கில் தடவி மெல்லிய சளி மாதிரியைஅல்லது செல்கள் எடுக்கப்பட்டு இந்த RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. 

P.C.R பரிசோதனையின் முடிவுகள் 4தொடக்கம் - 6மணித்தியாலங்களுக்குள் தெரியவரும். 

இதைவிட அன்ரிஜன் சோதனையுமுண்டு. அது வேகமாக 15-நிமிடநேரத்துள் தொற்று பற்றி முடிவை அறிவிக்கும். தற்காலத்தில் பெரும்பாலும் சனத்தொகை கூடியஇடங்களில் இப்பரிசோதனைதான் செய்யப்படுகின்றது. 

ஆக மூக்குத்துவாரத்தினுடாக இச்சோதனை இலகுவாக செய்யப்படுகிறதேயொழிய, கஷ்டமான சோதனை அல்ல. தற்போது பிரதேச செயலகம், பிரதேசசபை போன்ற நிறுவனங்களிலெல்லாம் இத்தகைய சோதனைகள் செய்யப்படுகின்றன. ஆக, இச்சோதனைகள் வேண்டத்தகாததல்ல என்பதனை மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும். 

இதனிடையே அடுத்த மாத நடுப் பகுதிக்குள் இலங்கைக்கு தடுப்பு மருந்துகள் தருவிக்கப்படுமென்று அரசாங்கம் கூறியுள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் தடுப்பு மருந்தை தருவதற்கு இணங்கியிருக்கின்றன. 

அடுத்த இருவாரங்களில் இரண்டு இலட்சம் ஒக்ஸ்போர்ட் ஆஸ்டாசனிக் தடுப்பூசிகளை கொண்டு வரப்படவிருக்கின்றன. உலகசுகாதார ஸ்தாபனமும் ஒரு இலட்சம் பேருக்கான தடுப்பு மருந்துகளை தந்துதவவிருக்கிறது. இச்செய்தி ஒருவகையில் இலங்கையயர்களுக்கு ஆறுதல் தரும் செய்தியாக உள்ளது. 

இந்தியா_ இங்கிலாந்து கூட்டுத் தயாரிப்பான கோவிஷீல்ட், கோவேக்ஷீன் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் இலங்கைக்கு கொண்டு வரப்படவிருக்கின்றன. இந்தியாவிடம் 150நாடுகள் இதனைக் கேட்டு விண்ணப்பித்துள்ளன. 

ஏற்கனவே இந்தியாவில் 30கோடி மக்களுக்கு முதலில்ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டு கடந்த சனிக்கிழமை 1.91இலட்சம் பேருக்கு தடுப்பு மருந்துகள் ஊசி மூலம் ஏற்றப்பட்டன. 

இந்தியாவில் பல்வேறு பரிசோதனைகளுக்கு பின்னர்தான் இத்தடுப்பூசி ஏற்ற அனுமதிக்கப்பட்டது. இது பாதுகாப்பானது என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். 

இந்நிலையில் உலகெங்கும் பல நாடுகளிலும் கோடிக்கணக்கில் தினமும் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. ஒரு சிலருக்கு அவர்களுக்கு ஏற்கனவே உள்ள வியாதி காரணமாக அவர்கள் மரணித்த சம்பவத்தை சில ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்தமையையும் இங்கு சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. 

உலகிலிருந்து இக்கொடிய கொரோனாவை அழிப்பதற்கான நடவடிக்கைகளை சகலரும் ஒத்துழைத்து முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரதும் விருப்பம் ஆகும்.

வி.ரி.சகாதேவராஜா
(காரைதீவு குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...