நாட்டின் அபிவிருத்தி, விவசாய மேம்பாட்டில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவர்

நாட்டின் அபிவிருத்தி, விவசாய மேம்பாட்டில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவர்-Civil Defence Forces will be Involved In Countries Development and Well as Agriculture

- புதிய பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர

நாட்டின் அபிவிருத்தி மற்றும் விவசாயத்துறை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுப்படுத்த  திட்டமிட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டிற்கு தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சேவையாற்ற தேவையான பயிற்சிகளை சிவில் பாதுகாப்பு படையினருக்கு எதிர் காலத்தில் மேலும் வழங்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகரவினால் அண்மையில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர கொழும்பு கொம்பனி வீதியிலுள்ள பாதுகாப்பு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவகத்தில் இன்று (21) காலை உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடமைகளை பொறுப்பேற்க வருகைத் தந்த மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவை அதன் மேலதிக பணிப்பளார் நாயகம் ரியர் அட்மிரல் உதேனி சேரசங்க வரவேற்றதுடன் விஷேட மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது. சமய அனுஷ்டானங்களை தொடர்ந்து சுபவேளையில் முதல் ஆவணங்களில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்ற அவர் மேலும் குறிப்பிடுகையில் :-

இராணுவத்தில் 34 வருடங்களும் ரணவிரு சேவா அதிகார சபையில் ஓர் ஆண்டுகாலம் சேவையாற்றிய நிலையில் என்மீது நம்பிக்கை கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ என்னை இந்த பொறுப்பு வாய்ந்த பதவிக்கு நியமித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சிவில் பாதுகாப்பு திணைக்களம் தாய் நாட்டிற்காக பாரிய சேவைகளை முன்னெடுத்து வருகின்றன. இதன் செயற்பாடுகளை ஜனாதிபதி மற்றும் பொறுப்பான அமைச்சரின் வழிகாட்டலில் மேலும் விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளேன்.

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் சிவில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் ஈடுப்படுத்தப்படுவர். விஷேடமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்துறை மேம்பாட்டுக்கும் பங்களிப்பை வழங்கவுள்ளோம்.

எல்லை கிராமங்களை பாதுகாக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை ஆரம்ப காலத்தில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். இதற்கென நந்தமித்ர படையணி உருவாக்கப்பட்டது. இதேவேளை, நாட்டிற்கு தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து சேவையாற்ற தேவையான பயிற்சிகளை சிவில் பாதுகாப்பு படையினருக்கு எதிர் காலத்திலும் வழங்கவுள்ளதாக மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர மேலும் தெரிவித்தார்.

நாட்டின் அபிவிருத்தி, விவசாய மேம்பாட்டில் சிவில் பாதுகாப்பு படையினர் ஈடுபடுவர்-Civil Defence Forces will be Involved In Countries Development and Well as Agriculture

இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் தேசிய பாதுகாப்பு உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரட்ன, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், விவசாய அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, இராணுவ, கடற்படை, விமானப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், இலங்கை துறைமுக அதிகார சபை தலைவர் ஜெனரல் தயா ரத்நாயக்க, ஆகியோர் கலந்து கொண்டனர்.

- ஸாதிக் ஷிஹான்


Add new comment

Or log in with...