கொள்கை விடயங்களில் அரசாங்க அதிகாரிகள் உள்ளீடுகளை வழங்க வேண்டும்

- அரசாங்க கணக்குகள் பற்றிய குழு

சிக்கலான விடயங்கள் தொடர்பில் எடுக்கப்படும் அமைச்சரவைத் தீர்மானங்கள் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைக்க அரசாங்க அதிகாரிகளுக்கு உள்ள வாய்ப்புக்கள் தொடர்பில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென (19) நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது.  

விவசாய அமைச்சுக்காகத் தனியாரின் கட்டடமொன்று வாடகைக்கு எடுக்கப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட கணக்காய்வறிக்கை, அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் கலந்துரையாடலுக்கு எடுக்கப்பட்டபோது இக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன இந்தப் பரிந்துரையை முன்வைத்தார்.  

கொள்முதல் நெறிமுறைக்கு எதிராகவும், வெளிப்படைத் தன்மைமின்றியும், அரசாங்க மதிப்பீட்டாளர்களின் மதிப்பீட்டுப் பெறுமதிக்கு அதிகமாகவும் சென்று அரசாங்க நிதியில் 1,524மில்லியன் ரூபா செலவில் விவசாய அமைச்சுக்காக தனியார் ஒருவரின் கட்டடத்தை வாடகைக்குப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமையவே விவசாய அமைச்சுக்கு தனியார் கட்டடம் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக குழுவில் வெளிப்பட்டது. இது தொடர்பில் அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக புதிய விவசாய அமைச்சின் செயலாளர் சுமேதா பெரேரா இங்கு தெரிவித்தார். 

இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது தவிர்ப்பதற்கு ஒழுங்குமுறையொன்று வகுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பில் குழு விரிவாகக் கலந்துரையாடியது. இதற்காகப் புதிய ஒழுங்குவிதிகள் மற்றும் கொள்கை தயாரிக்கப்பட வேண்டியது பற்றியும் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. 

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுக் கூட்டத்தில் அமைச்சர் உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான லசந்த அழகிவன்ன, துமிந்த திஸாநாயக்க, வைத்திய கலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, பாராளுமன்ற உறுப்பினர்களான டி.வை.ஜி.ரத்னசேகர, வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, வீரசுமன வீரசிங்ஹ, திஸ்ஸ அத்தனாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, புத்திக பத்திரன மற்றும் எஸ்.சிறிதரன் ஆகியோரும், அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.


Add new comment

Or log in with...