ஹிட்லர், சார்ளி சப்லின்... விமர்சனங்களை பாராளுமன்றில் முன்வைக்க முடியாது | தினகரன்

ஹிட்லர், சார்ளி சப்லின்... விமர்சனங்களை பாராளுமன்றில் முன்வைக்க முடியாது

ஹிட்லர், சார்ளி சப்லின் போன்ற விமர்சனங்களை பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய முன்வைக்க முடியாதென சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்தன ஹரீன் பெர்னாண்டோ எம்.பிக்கு அறிவுரை கூறினார். 

பாராளுமன்றத்தில் நேற்று உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் கொண்டு முன்வைக்கப்பட்ட, சீனி இறக்குமதி மோசடி தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேணை மீதான விவாதத்தில் உரையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ எம்.பி, 

1889இல் சிறந்த கதாபாத்திரங்கள் இரண்டு பிறந்தன. இருவரும் ஒரே மாதிரியாகதான் இருந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல ஹிட்டலரும், சார்ளி சப்பிலுமே அவர்கள். ஹிட்லருக்கும் சின்ன மீசை இருந்தது. சார்லி சப்லினுக்கும் அப்படியே மீசை இருந்தது. இருவரும் ஒரே வருடத்தில் பிறந்தவர்களே. ஆனால் இரண்டும் வேவ்வேறான கதாபாத்திரங்கள். ஹிட்லர் முழு உலகையும் அழவைத்தார். சார்ளி சப்லின் முழு உலகையும் சிரிக்க வைத்தார். இந்த இரண்டும் தற்போது இந்த நாட்டில் உள்ளதென கருத்து வெளியிட்டிருந்தார். 

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கமைய இது போன்ற விமர்சனங்களை முன்வைக்க முடியாதெனக் கூறினார். 

இதனை தொடர்ந்து, மீண்டும் உரையாற்றிய ஹரீன் பெர்னாண்டோ, நான் ஹிட்லரையும் சார்ளி சப்லினையுமே கூறினேன். இதனை ஜனாதிபதி பற்றி கூறியதாக நீங்கள் நினைத்திருந்தால் மன்னியுங்கள் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...