இந்து கடவுள் இருந்த இடத்தை அழித்தமை கவலை தரும் செயல் | தினகரன்

இந்து கடவுள் இருந்த இடத்தை அழித்தமை கவலை தரும் செயல்

- இராஜாங்க அமைச்சர் விதுரவுக்கு சார்ள்ஸ் எம்பி அவசர கடிதம் 

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் அகழ்வாராய்ச்சியில் தமிழர்களையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.  

பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், இராஜாங்க அமைச்சர் விதுரவிக்கிரமநாயக்க மற்றும் தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் அநுர மனதுங்க ஆகியோருக்கே அவசர கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.  

அந்தக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  

முல்லைத்தீவு, குருந்தூர் மலையில் ஆதி சிவன் ஐயனார் கோவிலை காலா காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்த நிலையில் இந்து ஆலயத்தின் அடையாளங்களை அழித்ததுடன் அப் பகுதியில் தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து, அகழ்வுப் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.  

தொல் பொருள் திணைக்களத்தின் ஆலோசனையில் கடந்த திங்கட்கிழமை(18) அகழ்வுப் பணிகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தாங்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டீர்கள்.  

அதன் போது இந்துக் கடவுளின் அடையாளங்கள் அழிக்கப்பட்டிருந்ததுடன் அகழ்வுப் பணியில் யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் விரிவுரையாளர்களையோ யாழ். பிராந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களையோ உள் வாங்காமல் ஆரம்பித்தமையினால் தமிழ் மக்களும் நானும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்.  

ஆராய்ச்சிப் பணி வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும் என நான் விரும்புகின்றேன்.  

எனவே யாழ். பல்கலைக்கழகத்தினரின் தொல் பொருள் பீடத்தினரையும் யாழ். பிராந்திய தொல்பொருள் திணைக்கள ஆராட்சி உத்தியோகத்தர்களையும் இணைத்துக் கொள்ளும்படி தங்களை கேட்டுக் கொள்கின்றேன் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மன்னார் குறூப் நிருபர்  


Add new comment

Or log in with...