தோட்டத் தொழிலாளர் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்

- முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ்

இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தின் ஊடாக தொழிலாளர் பிள்ளைகளுக்கு என இந்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்யும் புலமைப்பரிசில் தொகை அதிகரிக்கப்பட வேண்டும்    என முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். 

மகாத்மா காந்தி தென்னாபிரிக்காவிலிருந்து மீண்டும் இந்தியா திரும்பி தேச விடுதலை போராட்டத்தை ஆரம்பித்த நாளை சிறப்பிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின விழா ஆண்டுதோறும் உலகெங்கிலும் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் கண்டிக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் கண்டி மாகவலி ரீச் விருந்தகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் உரையாற்றுகையில், மலையகத் தமிழர்களாகிய நாம் இந்திய வம்சாவளியினர் என்பதுதான் எமது வரலாறு. அந்த வரலாற்றின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதே இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் கண்டி காரயாலயம்.  1947ஆம் ஆண்டுமுதல் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்புத் தொகையாக மாதாந்தம் வழங்கி வரும் பங்களிப்பினை அதன் பயனாளிகளில் ஒருவனாக வரவேற்கின்றேன். அதே நேரம் அவ்வாறு வழங்கப்படும் உதவித்தொகை உயர்தர மாணவர்களுக்கு ஐநூறு ரூபா, பல்கலைக்கழக மாணவர்களுக்கு 1500/- ரூபா என்ற அளவிலேயே நீண்டகாலமாக இருந்து வருகிறது. அதனை அதிகரிப்பதற்கு முன்னைய டெல்லி பயணங்களின்போது வெளிவிவகாரத்துறை அமைச்சராகவிருந்த மறைந்த சுஷ்மா சுவராஜ் அம்மையாரிடம் முன்மொழிவு செய்துள்ளேன். தவிரவும் இந்திய அரசாங்கத்தினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்தியாவில் பட்டப்படிப்பு பெறுவதற்காக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு என ஒரு தொகையை ஒதுக்கீடு செய்வதிலும் அம்மையார் கொள்கை அளவில் இணங்கி இருந்தார்.

இந்த இரண்டு விடயங்களிலும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என எனது கோரிக்கையை வலியுறுத்த விரும்புகிறேன் என எனவும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...