நான்கு வயது குழந்தையின் காதினுள் குண்டுமணி; வவுனியா வைத்தியசாலையில் அசமந்தம்

- திலீபன் எம்.பியால் தீர்வு

வவுனியா வைத்தியசாலையில் நான்கு வயது குழந்தைக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட அசமந்த போக்கு பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் தலையீட்டினால் தீர்த்து வைக்கப்பட்டது.  

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று முன்தினம் வவுனியாவைச் சேர்ந்த 4வயது குழந்தையின் காதினுள் குண்டுமணி ஒன்று சென்ற நிலையில் இரவு 10.00மணிக்கு வவுனியா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  

இதன்போது வலியால் துடித்த குழந்தை குறித்த வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அனுமதிக்கப்பட்டும் குறித்த குழந்தைக்கு எந்தவிதமான சிகிச்சையும் வழங்கப்படவில்லை என பெற்றோர் தெரிவிக்கின்றனர்.அத்துடன் வைத்தியர் கடமையில் இல்லை என்று தெரிவித்து நாளைய (நேற்று) கிளினிக்கில் சிகிச்சை பெறுமாறு கூறி குழந்தையின் தாயிடம் இருந்து சுயவிருப்பின் பேரில் தாதியால் கடிதம் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டு அனுப்பி வைத்துள்ளனர்.  

இந்நிலையில் குழந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலை கிளினிக்கிற்கு அழைத்துச்சென்றபோதும் உடனடியாக சிகிச்சை வழங்காமல் அலைக்கழிக்கப்பட்டதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.  

இதனையடுத்து குறித்த விடயம் பாராளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் கவனத்திற்குகொண்டு செல்லப்பட்டது.   அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று இச்சம்பவம் தொடர்பாக உரியவர்களுடன் கலந்துரையாடிய நிலையில் அக்குழந்தையின் காதில் இருந்து குண்டுமணி வெளியே அகற்றப்பட்டுள்ளது.

கோவில் குளம் குறூப் நிருபர் 


Add new comment

Or log in with...