மஞ்சள் தூளுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது

- ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர்

மத்திய மாகாணத்தில் பல்வேறு இடங்களிலும் பச்சை மஞ்சள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாட்டில் மஞ்சள் தூளுக்கான தட்டுப்பாடு நீங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மஞ்சளுக்கான இறக்குமதி கட்டுப்பாடு காரணமாகவே மஞ்சள் விலை அதிகரிப்புடன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக நாட்டில் பல இடங்களிலும் மஞ்சள் பயிர்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. குறிப்பாக கண்டி, மாத்தளை மாவட்டங்களில் பல இடங்களில் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏற்றுமதி விவசாயப் பணிப்பாளர் (அபிவிருத்தி) உபுல் ரணவீர இது பற்றித் தெரிவிக்கையில்-

தற்போது சுமார் 370ஹெக்டேயரில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான உற்பத்திகளும், சுமார் 1000ஹெக்டேயரில் வீட்டுத்தோட்ட உற்பத்திகளும் நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனூடாக சுமார் 25,000மெற்றிக் தொன் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகிறது. இதில், சுமார் 5,000மெற்றிக் தொன் 2021பெப்ரவரியாகும் போது சந்தைக்கு வரலாம் எனத் தெரிவித்தார்.   இதே அடிப்படையில்  பயிரிட முடிந்தால், நாட்டின் உள்ளூர் மஞ்சள் தேவை 2022ஆம் ஆண்டிற்குள் பூர்த்தி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.அதே நேரம் தற்போதைய விலை ஏற்றத்தை கவனத்திற்கொண்டு  முதிர்ச்சியடையாத மஞ்சளை அறுவடை செய்வதைத் தவிர்க்குமாறு மஞ்சள் விவசாயிகளை பணிப்பாளர் கேட்டுக்கொண்டார்.

ஏனெனில் முதிராத மஞ்சள் சுமார் 10 --12 கிலோ மூலமே ஒருகிலோ மஞ்சள் பெற முடியும். முதிர்ச்சியடைந்த மஞ்சள் இதன் அரைவாசி அளவே தேவைப்படலாம். முதிர்ச்சியடையாத மஞ்சள்  உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் பாதகமாக அமையும். அந்த மஞ்சளின் தரமும் குறைந்தபட்சமாகவே இருக்கும்  என்றும் அவர் தெரிவித்தார்.

(அக்குறணை குறூப் நிருபர்)


There is 1 Comment

இது வரை காலமும் பறிமுதல் செய்த மஞ்சளை சாப்பிட்ட து. யாரோ

Add new comment

Or log in with...