பீ.சி.ஆர் வதந்தியால் சம்மாந்துறை பாடசாலைகளில் அல்லோல கல்லோலம்

பாடசாலைகளுக்குள் நுழைந்து  பிள்ளைகளை பலவந்தமாக பெற்றோர் அழைத்துச் சென்ற சம்பவமொன்று சம்மாந்துறை பாடசாலைகளில் நடைபெற்றுள்ளது.

இச்சம்பவத்தால் சம்மாந்துறை பிரதேச பாடசாலைகளில் அல்லோல கல்லோல நிலைமை ஏற்பட்டதனை அவதானிக்க முடிந்தது. 

சில பெற்றோர் பிள்ளைகளை அழைத்துச் சென்ற நிலையில் தொடராக பாடசாலைகளை நோக்கி படையெடுத்த பெற்றோர் பாடசாலைகளின் நுழைவாயிலை முற்றுகையிட்டதுடன், தங்கள் பிள்ளைகளைத் தருமாறு நிருவாகத்தினரிடம் மன்றாட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சம்பவம் நேற்று (19) செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது. 

இது பற்றி தெரியவருவதாவது, 

பாடசாலைகளில் மாணவர்களுக்கு பீ.சி.ஆர் எடுப்பதாகவும் சில மாணவர்களை பொலிஸாரும் சுகாதாரத் தரப்பினரும் பாடசாலைகளுக்குச் சென்று அழைத்துச் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட வதந்தியை அடுத்தே மேற்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இதனைக் கேள்வியுற்ற பெற்றோர் பிள்ளைகளை வீட்டுகளுக்கு அழைத்துச் செல்ல முனைந்த போதே பாடசாலைகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.    குறித்தவொரு பாடசாலைக்குச் செல்லும் பெற்றோர் சம்மாந்துறையிலுள்ள வேறு ஒரு பாடசாலையைக் கூறி அங்கு பீ.சீ.ஆர். எடுக்கப்படுகிறது. தங்கள் பிள்ளைகளைத் தாருங்கள் என அழைத்துச் சென்றுள்ளனர்.     விடயத்தை ஆரந்த போது மாணவர்களை பீ.சீ.ஆர். எடுத்த சம்பவம் எதுவும் சம்மாந்துறை வலயப் பாடசாலைகளில் நடக்கவில்லையென்று தெரியவந்துள்ளது.     இது வதந்தியென்றும் பாடசாலைகளுக்கு விஜயம் செய்த பொலிசார் தெரிவித்தனர். எனினும் அது பயனளிக்கவில்லை. மாகாண மட்டப் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருந்த மாணவர்கள் இடைநடுவில் பெற்றோர்களுடன் அனுப்பப்பட்டுள்ளனர்.    குறித்த சம்பவத்தால் ஆசிரியர்களைத் தவிர மாணவர்கள் எவரும் இல்லாத நிலையில் பாடசாலைகள் வெறிச்சோடிக் கிடந்ததை அவதானிக்க முடிந்தது.    பாடசாலை மாணவர்களைக் குழப்புகின்ற வதந்திகள் கல்முனை பிரதேச பாடசாலைகளிலும் கடந்த வாரம் பரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

பெரியநீலாவணை தினகரன், காரைதீவு குறூப், நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்கள்


Add new comment

Or log in with...