இயற்கை வாயு சேமிப்பை அதிகரிக்க இந்தியா திட்டம் | தினகரன்

இயற்கை வாயு சேமிப்பை அதிகரிக்க இந்தியா திட்டம்

இந்தியா 5.33மில்லியன் தொன் எரிபொருளை  அதன் நிலத்தடி சேமிப்பில் வைத்துள்ளது. விசாகபட்டினம், மங்களூர் மற்றும் பதூரில் இந்த எரிபொருள் சேமிப்புகள் உள்ளன. எரிபொருளை அடுத்து இந்தியா தற்போது இயற்கை வாயுவை சேமிப்பதில் அக்கறை கொண்டுள்ளது. நாட்டின் எரிசக்தி சேமிப்பை மேலும்  அதிகரித்துக் கொள்வதுடன், இயற்கை வாயுவை விநியோகிக்கும் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளின் விநியோகத் தடைகள் மற்றும் அடிக்கடி ஏற்படும் விலையேற்றம் ஆகியவற்றில் இருந்து தப்புவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எல்லை மோதல்கள் மற்றும் அண்மையில் சீனாவுடன் ஏற்பட்ட பதற்ற நிலை போன்ற சமயங்களில் ஏற்படக் கூடிய எரிபொருள் தேவை அதிகரிப்பை  சமாளிக்க இந்த சேமிப்பு உதவும்.

உலகளாவிய  எரிசக்தி சந்தையில் தற்போது எண்ணெய் மற்றும் வாயு விலை ஸ்திர நிலையில் உள்ளதால் நாட்டின் வாயு சேமிப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிய வருகிறது. இந்தியாவில் எதிர்வரும் 2021/2022வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பொன்று இடம்பெறக் கூடும்.

2021ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ள நிலையில், தனது எண்ணெய் சேமிப்பு இருப்பை  அதிகரித்துக் கொள்ள ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கையினால் பாரிய தொகையை மீதப்படுத்திக் கொள்ள முடிந்துள்ளது. அதனால் எரிவாயு விடயத்திலும் அது போன்றவொரு நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளதாகக் கூறலாம்.

உலக சந்தையில் திரவ நிலை இயற்கை வாயுவின் தற்போதைய விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகு 6அமெரிக்க டொலர்கள் ஆகும். இது கடந்த வருட முற்பகுதியில் இருந்த விலைக்கு சற்று அதிகமாகும். எனினும் சேமிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு ஏற்ற விலை ஆகும்.

வெறுமையாக உள்ள வாயு வயல்கள் அல்லது  பாரிய உப்பளங்களில் வாயுவை சேமிப்பதே அதன் சேமிப்பை கட்டியெழுப்புவதற்கான திட்டமாக உள்ளது.

2030ஆம் ஆண்டில் இயற்கை வாயுவின் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று அதிகாரபூர்வ அறிக்கையொன்று கூறுகிறது. இதனால் உள்ளூர் உற்பத்தி மற்றும் உள்ளூர் தேவைக்கும் இடையில் பாரிய இடைவெளி ஏற்படும். அவ்வாறான நிலையில் உள்ளூர் வாயுத் தேவையில் 85சத வீதம் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட வேண்டியிருக்கும்.

உள்ளூர் இயற்கை வாயுத் தேவையில் சுமார் அரைவாசி இப்போது  இறக்குமதி மூலமே கிடைக்கிறது. தூய்மையான வாயு அடிப்படையில் அமைந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் அதிக கரிசனை கொண்டிருப்பதால் அதன் தேவை மேலும் அதிகரிக்கும். அதனால் திரவ நிலை இயற்கை வாயுவின் இறக்குமதியையும் அதிகரிக்க வேண்டியிருக்கும்.

இந்தியாவில் வாயு சேமிப்பை கட்டியெழுப்பும் தேசிய சக்தி கொள்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. பாவனையாளர்களுக்கு இடைவிடாத வாயு தேவையை உறுதி செய்ய முன்னைய நகல் கொள்கையொன்று வாயு சேமிப்புத் தேவையை சிபாரிசு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேநேரம் வாயுத் தேவையை கட்டியெழுப்புவது பற்றிய பல்வேறு சிபாரிசுகளை ஆராய்வதற்காக பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சு குழுவொன்றை அமைத்துள்ளது.

இந்நிலையில் வாயு சேமிப்பை கட்டியெழுப்ப தனியார் துறையை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய எண்ணெய் கம்பனிகளின் வெறுமையாக்கப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் வாயு வயல்கள் போட்டித் தன்மையுடன் கூடிய அடிப்படையில் அக்கறையுள்ள சந்தைத் தரப்பினருக்கு வழங்கப்படவுள்ளன.

அத்துடன் வாயுத் தேவையை கட்டியெழுப்ப உப்பளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களை பயன்படுத்திக் கொள்ளவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. சேமிப்புத் தளங்கள் இனங்காணப்பட்டவுடன் அவற்றை பயன்படுத்திக் கொள்வதற்கான விலை கோரல்கள் கோரப்படும்.

இந்த செயற்பாட்டில் வெளிநாடுகளில் உள்ள எண்ணெய்  உற்பத்தி நிறுவனங்களுக்கு தற்போது எண்ணெய் சேமிப்பில் பங்குபற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதைப் போன்று வாயு சேமிப்பில் பங்குபற்றவும் வாய்ப்பளிக்கப்படும்.

வாயு சேமிப்பானது முக்கியமான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு இடைவிடாத எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்துகிறது. எனினும் பாவனையாளர்களுக்கான எரிபொருள் விலைகள் குறைவாக இருக்கும் வகையில் சேமிப்பு தளத்தின் செலவு இருக்க வேண்டும்.

வாயு பற்றாக்குறை காரணமாக 25,000மெகா வோட் அளவில் அமைந்த சக்தித் திட்டங்கள் வாயு பற்றாக்குறை காரணமாக தற்போது குறைந்த அளவு செயல்திறனுடனேயே இயங்குகின்றன.

இந்தியாவில் வாயு உற்பத்தி கடந்த சில வருடங்களாகவே தேக்க நிலையில்தான் இருந்து வருகிறது. இதனால் திரவ நிலை இயற்கை வாயுவின் இறக்குமதி அதிகரித்துள்ளது.

வாயு சேமிப்பு என்பது இந்தியாவுக்கு புதியதல்ல. அதிக அளவில் சக்தியை செலவிடும் பல நாடுகள் வாயு விநியோகம் சீராக இருக்கவேண்டும் என்பதால் அதனை சேமிப்பதற்கான வழிமுறைகளை அமைத்துள்ளன.

உலகிலுள்ள வாயு சேமிப்பு தளங்களில் மூன்றில் ஒன்று அமெரிக்காவிடம் உள்ளது. அதே நேரம் ரஷ்யா, உக்ரேன், கனடா, ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் பெருமளவு வாயு சேமிப்பு வசதிகளைக் கொண்டுள்ளன.


Add new comment

Or log in with...