இவ்வாரம் பாராளுமன்ற அமர்வு இரு நாட்களுக்கு மாத்திரம்

பாராளுமன்ற அமர்வு இரு நாட்களுக்கு மாத்திரம்-This Week Parliament Only 2 Days-Decision Taken at Party Leaders Meeting

நாளை (19) மற்றும் நாளைமறுதினம் (20) ஆகிய தினங்களில் பாராளுமன்ற அமர்வுகளை நடத்துவதற்கு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று (18) முற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கொவிட் 19 சுகாதார ஒழுங்குவிதிகளை முழுமையாகப் பேணும் வகையில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல இங்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

நாளை முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் விசேட வியாபாரப் பண்டங்கள் அறவீட்டுச் சட்டத்தின் கீழான 6 கட்டளைகள் மற்றும் சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான தீர்மானங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. முற்பகல் 10.00 முதல் முற்பகல் 11 மணிவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூல விடைக்கான கேள்விகளை எழுப்புவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், வினாக்கள் பத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இரண்டாவது தினமான நாளைமறுதினம் (20) தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்படும் சபை ஒத்திவைப்பு யோசனை மீதான விவாதம் முன்னெடுக்கப்படும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார். இவ்விவாதத்துக்காக முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 4.30 மணிவரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ள பல்வேறு சட்ட ஒழுங்குவிதிகளின் கீழ் அமைச்சர்களால் முன்வைக்கப்படுகின்ற அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களால் வெளியிடப்படுகின்றன கட்டளைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பிலேயே இந்த சபை ஒத்திவைப்புப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அன்றையதினம் மதியபோசனத்துக்காக சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும். அன்றையதினம் முற்பகல் 10 மணி முதல் மு.ப 11 மணிவரையான ஒரு மணித்தியாலம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அலுவலகள் பற்றிய குழுக் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன,  ஆளும் கட்சியின் முதற்கோலாசான் ஜோன்ஸ்டன் பெனாண்டோ, எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல் .பீரிஸ், டலஸ் அளகப்பெரும, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த சமரசிங்க, அநுரகுமார திஸாநாயக்க, டிலான் பெரேரா, ரிஷாட் பதியுதீன், ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சுகாதாரப் பாதுகாப்பான முறையில் அமர்வுகளை நடத்துவது தொடர்பில் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் பாராளுமன்றத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்திய சுகாதார பணிப்பாளர் நாயகம் அலுவலகத்தைச் சேர்ந்த வைத்திய அதிகாரிகள் சிலர் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

முதலில் அவர்களுடன் நடந்திய கலந்துரையாடல்களின்போது பாராளுமன்றத்தில் எச்சரிக்கையான சூழ்நிலை எதுவும் இல்லையென்று சுட்டிக்காட்டப்பட்டதுடன்,  அனைத்து சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி அமர்வுகளை நடத்த முடியும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.


இவ்வாரம் பாராளுமன்றத்தை இரண்டு நாட்கள் மாத்திரம் கூட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. (1.06pm)

இன்று (18) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் மாத்திரம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறவுள்ளது.

கொரோனா பரவல் நிலையைக் கருத்திற் கொண்டு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் 32 எம்.பிக்கள், பாராளுமன்ற ஊழியர்கள், பாராளுமன்றத்தில் கடமையாற்றும் ஏனைய பணியாளர்கள், அதனுடன் இணைந்த பிரிவுகள் மற்றும் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 911 பேர் உள்ளிட்ட 943 பேருக்கு PCR  பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 9 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சோதனையில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் கொரோனாத் தொற்று ஏற்படவில்லை என்பதோடு, பாராளுமன்ற ஊழியர்கள் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த ஐவர், பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியேயான பாதுகாப்பு வலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மூவர் உள்ளிட்ட 9 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, படைக்கல சேவிதல் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...