மகாவலி வலயங்களில் 5,65,000 மெ.தொன் நெல் அறுவடை எதிர்பார்ப்பு | தினகரன்

மகாவலி வலயங்களில் 5,65,000 மெ.தொன் நெல் அறுவடை எதிர்பார்ப்பு

தற்போதைய பெரும்போகத்தையொட்டி மகாவலி வலயங்களில் செய்கை பண்ணப்பட்டுள்ள நெற் செய்கையின் மூலம் 5,65,000மெற்றிக் தொன் நெல் அறுவடை எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.  

நெல் விளைச்சலை அதிகரிக்கும் நோக்கில் மகாவலி வலய மக்களுக்கு விஞ்ஞானபூர்வ அறிவைப் பெற்றுக் கொடுப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் 'ஒழுங்கு முறையான விவசாயத்திற்கு வழிகாட்டல்' என்ற தொனிப்பொருளின் கீழ் நீர்ப்பாசன அமைச்சரும், பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மகாவலி வலயங்கள் சார்ந்த கால்வாய்கள் மற்றும் மக்கள் குடியிருப்பு பொது உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் தலைமையில் தெஹியத்தகண்டிய சாலிகா மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,  

மகாவலி நீர்ப்பாசன பூமியின் பரப்பளவு 191,560ஹெக்டேயர்களாகும். அவற்றில் மகாவலி வலயங்கள் பத்துக்கும் உட்பட்ட 106,117ஹெக்டெயர் பரப்பளவில் நெல்லும் ஏனைய பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன. தற்போதைய பெரும்போகத்தின் நிமித்தம் மகாவலி வலயங்களில் மாத்திரம் 94,000ஹெக்டேயர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதன் ஊடாக 565,000மெற்றிக் தொன் நெல் அறுவடையை எதிர்பாரத்துள்ளோம்.  

சில விவசாயிகள் போதிய அறிவின்மையால் அதிகரித்த அறுவடையைப் பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பில் தரமற்ற இரசாயனப் பசளை அல்லது இயற்கைப் பசளை விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது. பசளையை அதிகளவில் பயிர்ச்செய்கைக்கு பாவிப்பதாலும் அதிக அறுவடையை பெற்றுக் கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார். 

மர்லின் மரிக்கார்  

 

 


Add new comment

Or log in with...