கொவிட்19 தடுப்பு மருந்து பாதுகாப்பு தருமா?

கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பொதுமக்களால் எழுப்பப்படும் பல்வேறு கேள்விகளுக்கு விரிவான விளக்கத்தை இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கே: குறுகிய காலத்தில் அறிமுகம் செய்யப்படுவதால், இந்த தடுப்பு மருந்து பாதுகாப்பானதாக இருக்குமா? தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமா?

பதில்: கொவிட்-19 தடுப்பு மருந்து தானாக முன்வந்து எடுத்துக் கொள்வது ஆகும். ஆனால், ஒருவரைப் பாதுகாக்கவும் மற்றும் நோய் பரவலை கட்டுப்படுத்தவும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.

கே: கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்தவர் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமா?

பதில்: கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், தடுப்பூசிகளை போட்டுக் கொள்வது வலுவான எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என அறிவுறுத்தப்படுகிறது.

கே: கோவிட் பாதிப்புக்கு உள்ளான நபர் (உறுதி செய்யப்பட்டவர்/சந்தேக நபர்) தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா?

பதில்: தடுப்பூசி போடும் இடங்களில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நோய், மற்றவருக்கு பரவும் அபாயம் இருக்கலாம் என்பதால், பாதிக்கப்பட்ட நபர் குணமடைந்த பின் தடுப்பூசி போட்டுக் கொள்வதை 14 நாட்கள் ஒத்திவைக்க வேண்டும்.

கே: இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் தடுப்பு மருந்து, மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்படும் தடுப்பு மருந்துகள் போல் தீவிரமாக இருக்குமா?

பதில்: ஆமாம். தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் திறனை உறுதி செய்ய பல கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கே: கொவிட்-19 தடுப்பு மருந்தால் ஏற்படும் சாத்தியமான பக்க விளைவுகள் எவை?

பதில்: ஊசி போடும் இடத்தில், மற்ற தடுப்பூசிகள் போடப்படும் போது ஏற்படும் பொதுவான பக்கவிளைவுகளான இலேசான காய்ச்சல் மற்றும் வலி போன்றவை ஏற்படலாம்.

கே: புற்றுநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெறுவோர் கொவிட்-19 தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ளலாமா?

பதில்: ஆம், பல்வேறு உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவோருக்கு தொற்று பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால் அவர்கள் கொவிட்-19 தடுப்பு மருந்தை அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...