பாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள் | தினகரன்

பாலமுனை, திராய்க்கேணி பிரதேசங்கள் நீரில் மூழ்கல்; தைப்பொங்கலை கொண்டாட முடியாது தவித்த மக்கள்

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப்பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பாலமுனை 6, திராய்க்கேணி கிராமம் மற்றும் பாலமுனை புது நகர் முதலாம் பிரிவு ஆகிய கிராம சேவகர் பிரிவிலுள்ள மக்கள் நேற்று முன்தினம் தொடராக பெய்த மழையினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை பாலமுனை திராய்க்கேணி தமிழ் கிராம சேவகர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான் பூரணமாக நிர்மாணிக்கப்படாமையினால் வெள்ளநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதை அவதானிக்க முடிகின்றது. இதனால் அங்குள்ள மக்களின் வாழ்வாதார தொழிலான வீட்டுத்தோட்டப்பயிர்ச் செய்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்.

ஆலய வளாகம் மற்றும் வீதிகள் முற்றாக நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. வியாழக்கிழமை (14) தைப்பொங்கல் தினமென்பதால் அங்குள்ள மக்கள் ஆலயத்துக்குச் சென்று பிரமாண்டமான முறையில் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுவது வழக்கமாக காணப்பட்டது. இருந்த போதிலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஆலயத்துக்குச் சென்று தைப்பொங்கல் தினத்தை கொண்டாட முடியாமல் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியதாக பாலமுனை திராய்க்கேணி கிராம சிறி முத்து மாரியம்மன் ஆலயத்தின் தலைவர் எஸ். கார்த்திகேசு கவலை தெரிவித்தார்.

மேலும் திராய்க்கேணி கிராமத்தின் வாழ்வாதார தொழிலாக காணப்படும் வீட்டுத்தோட்டப் பயிர்ச்செய்கையும் தொடர் மழையினால் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் வழிந்தோடக் கூடியவாறு கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வடிகான் பூரணமாக நிர்மாணிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மழை காலங்களில் வெள்ள நீர் வடிந்தோட முடியாதுள்ளது. திராய்க்கேணி கிராம மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கையினை வேண்டும் என்று ஆலயத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...