நாவலப்பிட்டியில் கொரோனா அச்சம் : நகர வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

- 16 பேருக்கு கொரோனா

நாவலப்பிட்டியில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாலவப்பிட்டி பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு கொரோனா தொற்று 15/01/2021 உறுதியானதையடுத்தே நாவலபிட்டி வர்த்தக சங்கத்தினர் இத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் 16 பேருக்கு 15/01 நேற்று வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி நாவலப்பிட்டி நகரிலுள்ள காப்புறுதி நிலையமொன்றில் வேலை செய்த ஐவருக்கு தொற்று உறுதியானதையடுத்து அவர்களோடு தொடர்பை பேணியவர்கள் 26 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே 09 ஆண்களும் 07 பெண்களுமாக 16 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்றுக்குள்ளானவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்களை அடையாளம் கண்டு சுயதனிமைப்படுத்தவுள்ளதாகவும் நாவலபிட்டி மேலதிக வைத்திய அதிகாரி லலித் கொபிமுன்ன தெரிவித்தார்.

இதனையடுத்தே நாவலப்பிட்டிநகர வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. நகர் முழுவதும் தொற்று நீக்கி தெளிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் என வர்த்தக சங்கத்தின் தலைவர் கித்சிரி கருணாதாஸ தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...