புதிய நியமனங்களால் கட்சிக்குள் அதிருப்தி

- மீண்டுமொரு பிளவு ஏற்பட வாய்ப்பு  

ஐக்கிய தேசியக் கட்சியில் பதவி மாற்றங்கள் இடம் பெற்றுள்ள நிலையில் கட்சிக்குள் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

நேற்று முன்தினம் இந்த புதிய நியமனங்கள் முன்னாள் பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இடம் பெற்றுள்ளதுடன் அந்த நிகழ்விற்கு ரவி கருணாநாயக்க உட்பட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் சமுகமளிக்கவில்லை என்றும் அதேவேளை அர்ஜுன ரணதுங்க , நவீன் திசாநாயக்க போன்றோர் மேற்படி நியமனங்களில் அதிருப்தியை தெரிவித்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. அதேவேளை ஐ.தே. கட்சியின் புதிய தவிசாளராக முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.  

கட்சியின் புதிய செயலாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாளராக ஏ. எஸ். மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கிணங்க உப தலைவராக முன்னாள் ஐ. தே. க. செயலாளரான அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளதுடன் கட்சியின் பிரதித் தலைவராக தொடர்ந்தும் ருவன் விஜேவர்தன செயற்படவுள்ளார்.  

கட்சியின் மூத்த துணை தலைவர்களாக டி.எம் சுவாமிநாதனும் அர்ஜுன ரணதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தயா கமகே, சாகல ரத்நாயக்க, சுனேத்ரா ரணசிங்க ஆகியோர் உப தலைவர்களாக செயற்படவுள்ளனர். கட்சியின் தேசிய அமைப்பாளராக நவீன் திசாநாயக்க செயற்படவுள்ளார்.  

நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கூடிய செயற்குழுக் கூட்டத்திலேயே மேற்படி பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

ஐ.தே. கட்சியின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன 1982ம் ஆண்டு மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் சங்கத்தில் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.  

2001- 2004காலப் பகுதியில் பொது நிர்வாக, முகாமைத்துவ மறுசீரமைப்பு அமைச்சராக பதவி வகித்துள்ள அவர் 2015ல் உள்ளநாட்டலுவல்கள் அமைச்சராகவும், 2018ம் ஆண்டு 52நாட்கள் அரசாங்கத்தை யடுத்து உருவான அரசாங்கத்தில் உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபை, உள்ளூராட்சி சபைகள் அமைச்சராகவும் பதவி வசித்துள்ளார்.

கடந்த 38 ஆண்டுகள் ஐ. தே. கட்சியில் பல்வேறு பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.(ஸ) 

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 


Add new comment

Or log in with...