பேதங்களில்லா பெருவாழ்வு மலர தைப்பொங்கல் வழிவகுக்கட்டும்!

விஸ்வப் பிரம்மம் கவியரசு
வை.இ.எஸ். காந்தன் குருக்கள்
(பிரதம குரு, போரதீவு ஸ்ரீபத்திரகாளி அம்மன் ஆலயம்)

ஆண்டுக்கொருமுறை உத்தராயண காலத்திலே தைப்பொங்கல் பண்டிகை உதயமாகின்றது. உலகில் பரந்துபட்டு வாழும் தமிழர்களால் நெஞ்சம் மகிழ பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.பொங்கல் திருநாள் தமிழர்களால் மாத்திரமின்றி உலகிலுள்ள பல்வேறு இன மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இவ்வருடத்தின் தைத்திருநாள் உலக மக்களை கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டெழச் செய்ய வேண்டுமென நாமெல்லாம் பிரார்த்திப்போம். கொரோனா அச்சுறுத்தல் முற்றாக நீங்குவதற்கு தைப்பொங்கல் திருநாள் வழிவகுக்கட்டும்.

தமிழர்களினால் தமிழ் மணம் கமிழ வையமெல்லாம் பொங்கல் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் இரண்டு வகைப்படும். ஒன்று உலகிற்கும் உயிர்களுக்கும் சக்தி கொடுக்கும் தெய்வமாய் போற்றப்படும் ஆதவனாகிய சூரிய பகவானுக்கு நேர்த்தி வைத்து வழிபாடியற்றி பொங்கப்படும் பொங்கலாகும். அடுத்தது உழவுத் தொழிலுக்காக பயன்படுத்தும் எருதுகளுக்கும், பால் தரும் பசுக்களுக்கும் நன்றி செலுத்துமுகமாக பொங்கப்படும் மாட்டுப் பொங்கலாகும்.

மாடு என்றாலே செல்வம் என்றுதான் நம் முன்னோர்கள் வகுத்திருந்தார்கள். ஆகவே மாடு, நெல் போன்றவை பிரிபடாமைச் செல்வத்திற்குள் அடங்குகின்றன. அர்த்தபுஷ்டியான இத்திருநாளை கொரோனா என்கின்ற தீய நுண்கிருமியினால் உலகமே திண்டாடிக் கொண்டிருக்கும் இக்கட்டான சூழ்நிலையில் கொண்டாட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஆகையினால் இப்பொங்கலையும், பொங்கல் சார்ந்த வழிபாடுகளையும் எம் மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மிகவும் அவதானமாகவும் அதேசமயம் ஆன்மிக ரீதியாகவும் மேற்கொள்ள வேண்டும். எனவே இன்றைய இனிய பொங்கலிலே பால், அரிசி, சர்க்கரை, பேரீச்சம்பழம், கற்கண்டு, சீனி போன்றவை சேர்ந்து ஓர் இனிப்பு நிறைந்த பொங்கல் பொங்கி சூரியபகவானை வழிபடுவோம். இனம்,மதம்,மொழி, ஜாதி என்ற பாகுபாடின்றி மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். ஒரு பொங்கலுக்கு எவை எவையெல்லாம் சேர்ந்து இனிப்பாக வருகின்றதோ அதேபோன்று எமது நாட்டு மக்களின் வாழ்க்கையும் அனைத்து தரப்பு மக்களின் ஐக்கியத்தினால் இனிமையாக மாற வேண்டும்.

அனைவரிடத்திலும் மனிதம் என்ற உணர்வு மேலோங்கட்டும்! அன்பு,பாசம்,பரிவு அனைத்தும் பொங்கி நிலையான இன்பத்தை அனைவரது வாழ்விலும் தருகின்ற பொங்கல் திருநாளாக இன்றைய நாள் மலரட்டும். இதற்காக அனைவரும் பிரார்த்திப்போம். சர்வலோக நாயகியான அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனின் பாதார விந்தங்களை வணங்கி அனைத்து உள்ளங்களுக்கும் மனமார வாழ்த்தி ஆசி கூறுகின்றேன்.

வி. பத்மசிறி...?
(ஆரையம்பதி தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...