தமிழர் வாழ்வில் புது மகிழ்ச்சி பொங்க தைத் திருநாளை வரவேற்போம் | தினகரன்

தமிழர் வாழ்வில் புது மகிழ்ச்சி பொங்க தைத் திருநாளை வரவேற்போம்

எமது மக்களின் வாழ்விடங்களிலும், ஒவ்வொரு இல்லங்களிலும் புது மகிழ்ச்சி பொங்கிடுமென்ற பெரு நம்பிக்கையோடு பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாளை அகம் மகிழ்ந்து வரவேற்போமென ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த வாழ்த்து செய்தியில், உழவர் திருநாள் என்றும் தமிழர் பெருநாளென்றும் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடி வரும் எமது மக்கள், இயற்கையை வணங்கிய எமது முன்னோர்கள் வழிநின்று தமிழர் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாகவும் காலந்தோறும் பாதுகாத்து வருகின்றனர்.

வாழ்வெங்கும் வலி சுமந்த எமது மக்கள் தை பிறந்தால் வழி பிறக்குமென்ற நம்பிக்கையில் பிறந்திருக்கும் தைப்பொங்கல் திருநாள் தம் வாழ்வில் புது மகிழ்வை தந்திடும் என்று எத்திர்பார்ப்பதை நான் உணர்கின்றேன்.

சூரியனுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டை கொண்ட எமது மக்கள் மலர்ந்து மறையாக ஒளிச்சுடராக தம்முடன் வாழ்ந்து தமது துயர் துடைப்பவர்களுக்கு நன்றி செலுத்தும் பண்பாட்டையும் மேலும் வளர்க்க வேண்டும்.

‘வல்லமை தாராயோ, இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே’ என்று பாரதி பாடியது போல், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் சகல உரிமைகளையும் வென்றெடுத்து தமிழர் தேசமெங்கும் ஒளியேற்ற எம்மிடமுள்ள வல்லமைக்கு பலம் வேண்டும்.

எமது வல்லமைக்கு பலம் சேர்க்கும் மாபெரும் சக்தியாக தமிழ் மக்கள் திரண்டு விட்டால் யாமார்க்கும் அடிமையல்லோம் யமனை அஞ்சோம், நரகத்தில் இனி இடர் படோமென தமிழ் மக்கள் நிமிர்ந்தெழும் காலம் இங்கு உருவாகும்.

கொடிய நோய் பிணிகள் தீர்ந்து எமது மக்கள் குதூகலித்து வாழவேண்டும். பதற்றங்களும், அச்சம் தரும் சூழலும் இனியிங்கு இல்லையென்ற நிலை நீடித்து நிலவ வேண்டும். வறுமையற்ற வாழ்வு மலர வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்வுயர வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடுகளும், நிலமற்ற மக்களுக்கு காணி நிலங்களும் வேண்டும். உறவுகளை இழந்து தவிக்கும் எமது மக்களின் கண்ணீருக்கு பரிகாரம் வேண்டும்.

எம் மக்களின் உறவுகள் சிறை மீண்டு வர வேண்டும். இறந்த உறவுகளுக்கு நீதிச்சட்டங்களை ஏற்று அஞ்சலி செலுத்தும் எமது மக்களின் ஆழ்மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.

எமக்கென்றொரு கனவுண்டு. அது தமிழ் மக்களின் நிரந்தர அரசியல் தீர்வாகும். அது நிறைவேற வேண்டும்.


Add new comment

Or log in with...