சுபிட்சம் மிகுந்த இனிய வாழ்வுக்கு தைத்திருநாள் வழிவகுக்கட்டும்! | தினகரன்

சுபிட்சம் மிகுந்த இனிய வாழ்வுக்கு தைத்திருநாள் வழிவகுக்கட்டும்!

உலகெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை இன்று கொண்டாடுகின்றனர். தைப்பொங்கல் திருநாளை தமிழர்களின் பண்டிகையென்று மாத்திரமன்றி, இந்து மக்களின் புத்தாண்டு என்றும் கூறலாம். இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மேற்கு நாடுகள் அடங்கலாக உலக நாடுகளில் வாழ்கின்ற இந்து மக்களால் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்ற பொதுப் பண்டிகையாக தைப்பொங்கல் திருநாள் விளங்குகின்றது.

அறிவியலுடன் கூடிய அரும்பெரும் தத்துவங்களை உள்ளடக்கிய திருநாள் தைப்பொங்கல் பண்டிகை ஆகும். உழவர் திருநாள் என்றும், சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகை என்றும் தைப்பொங்கலை ஆன்றோர் கூறியிருக்கின்றனர். இவ்வாறு தைப்பொங்கல் பண்டிகை சிறப்பித்துக் கூறப்படுவதற்கு அறிவியல்பூர்வமான விளக்கங்கள் உள்ளன.

உலகின் பிரதான சக்தி முதல் சூரியன் ஆகும். புவியின் சீரான சுழற்சி, இரவுபகல் ஒழுங்கு முறை, புவியின் தட்பவெப்ப மாற்றங்கள், தாவரங்கள் ஒளித்தொகுப்பு மூலம் தமக்கான உணவைத் தயாரிப்பதற்கான ஒளிச்சக்தியை வழங்குதல் போன்ற பலவற்றுக்கும் சூரியனே பிரதான சக்தி முதலாக அமைகின்றது. சூரியக் குடும்பத்தில் உயிரினங்கள் வாழக் கூடிய ஒரேயொரு கிரகமான பூமிக்கு பொருத்தமான காலநிலையை வழங்குவதில் சூரியனுக்கே முழுமையான பங்கு உண்டு.

இதனை சுருங்கக் கூறுவதாயின், சூரியன் இன்றேல் பூமியில் தாவரங்கள், மனித இனம், பிராணிகள் ஆகிய எதுவுமே இல்லை எனலாம். புவியின் தற்போசணிகள் தாவரங்கள் ஆகும். மனிதனும் பிராணிகளும் தாவரத்திலேயே நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கியிருக்கின்ற பிறபோசணிகளாக உள்ளன.

எனவே உலகின் உயிர் வாழ்வுக்கு அடிப்படையாக விளங்குகின்ற தாவரங்கள் உணவை சுயமாகத் தயாரிப்பதற்கான சக்தியை சூரியனே வழங்குகின்றது. தாவரங்கள் வாழ்வதனாலேயே பிராணிகள் வாழ்கின்றன. நாமும் வாழ்கின்றோம். இந்த அரும்பெரும் உண்மையை ஆன்றோர் அந்நாளிலேயே அறிந்திருந்தனர். அதனாலேயே விவசாயத்துக்கு முழுமையான சக்தி தருகின்ற சூரியனை தெய்வமாக வழிபட்டனர். அதற்கு நன்றியும் செலுத்தத் தலைப்பட்டனர்.

தலைமுறை தலைமுறையாக வந்த சூரிய வழிபாடே காலப்போக்கில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் தைப்பொங்கல் பண்டிகையானது என்பதுதான் நம்பிக்கையாக உள்ளது. உயிரற்ற பொருளாக கதிரவன் இருந்த போதிலும் கூட, உலக உயிர்களை வாழ வைக்கின்ற அந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி செலுத்த வேண்டுமென்ற உயரிய சிந்தனையுடனேயே மக்கள் தைப்பொங்கல் திருநாளில் சூரியபகவானுக்கு பொங்கல் இட்டு வழிபடுகின்றனர். எனவேதான் பொங்கல் பண்டிகை தினத்தை ‘உழவர் திருநாள்’ என்றும் மக்கள் விளிக்கின்றனர்.

இவ்வாறான அறிவியலும், பாரம்பரியமும் கொண்ட தைப்பொங்கல் பண்டிகையானது தமிழ் மக்களுக்குரிய முதன்மையான திருநாளாக விளங்குகின்றது. தமிழர்களைப் பொறுத்தவரை இன்றைய நாளானது புதிய வருடத்தின் தொடக்கமாகக் கொள்ளப்படுகின்றது. அதாவது ‘பழையன கழிந்து புதியன புகுந்து’ புதிய ஆண்டு சுபிட்சமாக அமைய வேண்டுமென்பதே மக்கள் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகும்.

தமிழர்களின் பூர்வீகம் தென்னிந்தியா ஆகும். உலகில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அனைவருமே தங்களது வாழ்வியல் முறைகளையும், பாரம்பரிய பழக்கவழக்கங்களையும் தென்னிந்தியாவில் இருந்தே பெற்றுக் கொண்டனர் என்பதே உண்மை. தைத்திருநாள் பண்டிகையின் பாரம்பரியமும் தமிழர்கள் தென்னிந்தியாவில் இருந்து பெற்றுக் கொண்டதுதான். இலங்கையைப் போன்று தென்னிந்தியாவிலும் தைப்பொங்கல் பண்டிகை சிறப்புற்று விளங்குகின்றது.

எமது நாட்டில் மாத்திரமன்றி உலக நாடுகள் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நாம் பண்டிகைகள் பலவற்றை கொண்டாட முடியாத நிலைமைக்கு உள்ளாகியுள்ளோம். கடந்த வருடத்திலும், இவ்வருடமும் தமிழர்களால் தைப்பொங்கல், சித்திரைப் புத்தாண்டு ஆகியவற்றைக் கொண்டாட முடியாமல் போயுள்ளது. அதே போன்று ஏனைய இன மக்களாலும் கடந்த வருடத்தில் தமது பண்டிகைகளைக் கொண்டாட முடியாமல் போய் விட்டது. இவ்வருடமும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்து விடுமென்ற நம்பிக்கை தென்படவில்லை.

அடுத்த வருடத்திலாவது கொரோனா என்ற அச்சுறுத்தல் நீங்கி மக்கள் அனைவரும் தத்தமது பண்டிகைகளை நிம்மதியாகவும், மகிழ்வாகவும் கொண்டாடுகின்ற சூழல் உருவாக வேண்டுமென்பதே அனைவரதும் பிரார்த்தனையாக உள்ளது. கொரோனா துன்பம் உலகை விட்டு நீங்கும் நாள் நெருங்கி விட்டதென்பதே அனைவரதும் நம்பிக்கையாக உள்ளது. மக்களது விழிப்புணர்வும், தடுப்பு மருந்து அறிமுகமும் அந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த வருடத்தில் தைப்பொங்கல் பண்டிகை மாத்திரமன்றி அனைத்து மக்களின் திருநாட்களும் நிம்மதியாகவும், மகிழ்வாகவும் அமையுமென்பதே நம்பிக்கையாகும். அவ்வாறான நம்பிக்கையுடன் இன்றைய தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாடுகின்ற மக்கள் அனைவருக்கும் தினகரன் தனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது.


Add new comment

Or log in with...