கொரோனாவை கட்டுப்படுத்த மலேசியாவில் அவசர நிலை

மலேசியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகமடைந்திருக்கும் நிலையில் அந்நாட்டு மன்னர் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

சுகாதாரத்துறை நெருக்கடிக்கு முகம்கொடுத்திருப்பதாக எச்சரிக்கப்பட்டு பிரதமரினால் நாட்டில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு ஒரு தினத்திலேயே நேற்று இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வரும் ஓகஸ்ட் 1ஆம் திகதி வரை இந்த அவசர நிலை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த நடவடிக்கையானது இராணுவப் புரட்சி அல்ல என்றும், நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்படாது என்றும் மலேசியப் பிரதமர் மொகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.
கூட்டரசு மற்றும் மாநில அரசுகள் நீடிக்கும் என்று குறிப்பிட்ட அவர், பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்படாது என்ற உறுதிமொழியையும் அளித்துள்ளார். நேற்றுக் காலை தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது அவர் இதை தெரிவித்தார்.

நாட்டில் வைரஸ் தொற்றுப்பரவல் மோசமான நிலையை எட்டியுள்ளது தெரியவந்ததால் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் அவசரநிலையை பிரகடனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என மாமன்னர் சுல்தான் அப்துல்லா ஹாஜி அகமட் ஷா உணர்ந்ததாக அரண்மனைக் காப்பாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...